சட்டமன்ற தேர்தலில் மாற்றத்தை உருவாக்க மக்கள் தயாராகி விட்டார்கள் – கமல்ஹாசன் பேச்சு

Spread the love

சட்டமன்ற தேர்தலில் மாற்றத்தை உருவாக்க மக்கள் தயாராகி விட்டார்கள் என்று சேலத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.


சேலம்,

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் மதுரையில் முதல் கட்டமாக தொடங்கினார். அதன்பிறகு பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அவர் நேற்று 4-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை சேலத்தில் தொடங்கினார். இதற்காக சென்னையில் இருந்து பிற்பகல் விமானம் மூலம் ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வந்த கமல்ஹாசனுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் கார் மூலம் சேலம் அழகாபுரம் பகுதிக்கு வந்தார்.

அப்போது அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசியதாவது:-

இங்கு திரண்டிருக்கும் அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். சட்டமன்ற தேர்தலில் ஒரு மாற்றத்தை உருவாக்க தமிழக மக்கள் தயாராகி விட்டார்கள் என்பதை உங்களது முகமும், ஆசியும் மீண்டும், மீண்டும் வலியுறுத்துகிறது. இங்கு குழுமியிருக்கும் தொண்டர்கள் அனைவரும் ஆளுக்கு 100 நபர்களை சந்தித்து கூறினாலே போதும் நாளை நமதே. நம் கதை தொடங்கும், அவர்களது கதை முடியும். இது நிச்சயம் நடக்கும் என நம்புகிறேன்.

இனிவரும் 10 ஆண்டுகள் தமிழகத்திற்கு புத்துணர்வு தரும் ஆண்டாக இருக்கும். மக்கள் நீதி மய்யம் நேர்மையான திட்டங்களை வகுத்து பொதுமக்களின் வாழ்க்கை மேம்பட பாடுபடும். ஊர் கூடி தேர் இழுத்தால் நாளை நமதே, நிச்சயம் நமதே.

இவ்வாறு அவர் பேசினார்.

இதனை தொடர்ந்து சேலம் ரெட்டிப்பட்டி பகுதியில் நேற்று இரவு மக்கள் நீதி மய்யம் சார்பில் கட்சி கொடியை ஏற்றி வைத்து கமலஹாசன் பொதுமக்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் செல்லும் இடங்களில் எல்லாம் தாய்மார்களும், இளைஞர்களும் கூடி வந்து வாழ்த்துகிறார்கள். இதன் அர்த்தம் என்ன? தமிழகம் மாற்றத்திற்கு தயாராகி விட்டது என்று தானே அர்த்தம். நேர்மையான, நோக்கத்துடன் மாற்றம் வரவேண்டும். அனைவரும் நேர்மையுடன் இருக்க வேண்டும். நல்லாட்சி மலர நல்லவர்கள் தேவை.

எனக்கு வரும் கூட்டத்தை பார்த்து சினிமாக்காரனை பார்க்க வந்த கூட்டம் என கூறுகிறார்கள். மாற்றத்தை பார்க்க வந்து இருக்கிறீர்கள். தமிழகத்தின் அவலங்களை மாற்ற வேண்டும். அதற்கான செயல் திட்டங்களை வைத்திருக்கிறேன். பொதுமக்கள் நிச்சயம் நீங்கள் தான் வருவீர்கள் என கூறுகிறார்கள். இதனால் எனக்கு நம்பிக்கை வருகிறது. நாளை நமதே ஆகட்டும். நாளை நிச்சயம் நமதே.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page