கொரோனாவால் புதிய வழிகாட்டு நடைமுறைகளுடன் தமிழகத்தில் 856 மையங்களில் குரூப்-1 தேர்வு நேற்று நடந்தது. இந்த தேர்வை 1.31 லட்சம் பேர் எழுதினார்கள்.

சென்னை,
துணை கலெக்டர் (18), துணை போலீஸ் சூப்பிரண்டு (19), வணிக வரித்துறை உதவி கமிஷனர் (10), கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் (14), ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் (4), தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் மாவட்ட அதிகாரி (1) என குரூப்-1 பதவியில் அடங்கிய 66 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு, கடந்த ஆண்டு ஏப்ரல் 5-ந் தேதி நடைபெற இருந்தது.
கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இந்த குரூப்-1 முதல்நிலை தேர்வு தமிழகம் முழுவதும் 856 மையங்களில் நேற்று நடந்தது. 66 பணியிடங்களுக்கு விண்ணப்பித்து இருந்தவர்களில் 2 லட்சத்து 56 ஆயிரத்து 954 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஆண்கள் 1 லட்சத்து 28 ஆயிரத்து 401 பேர், பெண்கள் 1 லட்சத்து 28 ஆயிரத்து 825 பேர், மூன்றாம் பாலினத்தவர் 11 பேர். தேர்வை கண்காணிக்க 856 முதன்மை கண்காணிப்பாளர்கள், 856 சோதனை செய்யும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
கொரோனா பரவலுக்கு பின் அதிகம் பேர் எழுதும் தேர்வு என்பதால், தேர்வர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், முறைகேட்டை தடுக்கவும் போதுமான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) எடுத்திருந்தது.
தேர்வு எழுத வந்தோருக்கு தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் உடல் வெப்ப பரிசோதனை நடந்தது. தொடர்ந்து கைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்ட பின்னரே அவர்கள், தேர்வறைக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டனர். முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும் முக கவசம் அணியாமல் வந்த ஒரு சிலருக்கு முக கவசமும் வழங்கப்பட்டன.
மேலும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக முன்புபோல இல்லாமல் அதிக இடைவெளியில் தேர்வர்கள் அமரவைக்கப்பட்டனர். ஒரு வகுப்பறையில் 10 முதல் 15 பேரே தேர்வு எழுதினர்.
கடந்த ஆண்டுகளில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதன் எதிரொலியாக, இந்த தேர்வில் இருந்து பல்வேறு புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டன.
ஹால் டிக்கெட்டுக்கு ஆதார் எண் கட்டாயம், ஓ.எம்.ஆர். தாளில் விடையைக் குறிப்பதற்கு கருப்பு நிற பால் பாயிண்ட் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும், தெரியாத கேள்விகளுக்கு ‘-’ என்ற கட்டத்தை ஷேடு ( shade ) செய்ய வேண்டும், விடையளித்த மொத்த கேள்விகளின் எண்ணிக்கையைக் குறிப்பிட வேண்டும், இடது பெருவிரல் ரேகை கட்டாயம் போன்ற நடைமுறைகள் புதிதாக அமல்படுத்தப்பட்டன. ஒவ்வொரு தேர்வு மையங்களிலும் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் விடைத்தாள்களை எடுத்துச் செல்லும் பெட்டிகளுக்கு ஜி.பி.எஸ். லாக்கர் கருவி பொருத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குரூப்-1 முதல்நிலை தேர்வு சரியாக காலை 10 மணிக்கு தொடங்கும் என்றும், 9.15 மணிக்குள்ளாக தேர்வர்கள் தேர்வு மையத்துக்குள் சென்றுவிட வேண்டும் என்றும் ஏற்கனவே டி.என்.பி.எஸ்.சி. அறிவுறுத்தியிருந்தது. இதன் காரணமாக 9.15 மணிக்கு பின் தாமதமாக வந்த தேர்வர்கள், தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை.
“வெளி மாவட்டங்களில் இருந்து பஸ்கள், ரெயில்களில் தேர்வு எழுத வந்ததால் சில நிமிடங்கள் தாமதமாகி விட்டது. இதற்காக தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படாதது வேதனையாக இருக்கிறது. எங்களின் பல மாத கடின உழைப்பு வீணாகிவிட்டது” என அந்த தேர்வர்கள் வேதனையுடன் தெரிவித்து சென்றனர்.
குரூப்-1 தேர்வில் 2.56 லட்சம் பேருக்கு தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும் 1 லட்சத்து 31 ஆயிரத்து 264 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 1 லட்சத்து 25 ஆயிரத்து 690 பேர் தேர்வு எழுதவில்லை. சென்னையில் மட்டும் 150 மையங்களில் குரூப்-1 தேர்வு நடந்தது. 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினார்கள்.
66 பணியிடத்துக்கு 1.31 லட்சம் பேர் தேர்வு எழுதியிருக்கிறார்கள். அதன்படி, ஒரு அரசு பணியிடத்துக்காக 1988 பேர் போட்டியில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.