தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்த 47 ஆயிரம் மையங்கள் தயார் – சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

Spread the love

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்த 47 ஆயிரம் மையங்கள் தயாராக உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.


சென்னை,

சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய அளவில் கொரோனா தடுப்பு மருந்தின் வினியோகம் எவ்வாறு இருக்கிறது என்பதை முடிவு செய்த பிறகு, மத்திய அரசு அதுகுறித்த தகவல்களை மிக விரைவில் பகிர்ந்து கொள்வார்கள். இன்றைய நிலவரப்படி ‘கோவேக்சின்’ மற்றும் ‘கோவீஷீல்டு’ தடுப்பு மருந்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதற்கட்டமாக, மத்திய அரசின் வழிகாட்டுதல் படி சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கான ஒத்திகை நேற்று முன்தினம் நடந்தது. நாம் இப்பொழுது தயார் நிலையில் இருக்கிறோம்.

கடந்த ஜூலை மாதம் முதலே, தமிழகத்தில் தடுப்பூசி வைக்கப்படுவதற்கான நடமாடும் குளிரூட்டப்பட்ட சேமிப்பு கிடங்குகள் முதல்-அமைச்சர் ஆலோசனையின் படி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், தடுப்பூசி போடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. இந்த நிலையில் மத்திய அரசு தடுப்பு மருந்து வினியோகிக்கும் நிறுவனத்துடன், ஆலோசனை நடத்தி, எவ்வளவு தடுப்பு மருந்து வினியோகிக்கப்படுகிறது? எங்கெல்லாம் வினியோகிக்கப்படுகிறது? என்ற அட்டவணைகளை தயார் செய்ய உள்ளது. அதைத்தொடர்ந்து வினியோகித்த பிறகே, தமிழகத்தில் எவ்வளவு சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் என ஒரு வாரத்தில் தெரியவரும்.

இந்த மாதத்துக்குள் (ஜனவரி) இந்த அட்டவணையை மத்திய அரசு வெளியிட வாய்ப்பு அதிகளவில் உள்ளது. தடுப்பு மருந்துகளை சேமித்து வைப்பதற்காக 51 இடங்கள் தயார் நிலையில் உள்ளன. இதில் 2.5 கோடி முதல் 2.7 கோடி வரையிலான மருந்துகளை சேமித்து வைப்பதற்கான வசதிகள் உள்ளன. தமிழகத்தின் கடைக்கோடி வரை தடுப்பு மருந்துகளை கொண்டு செல்வதற்கான குளிர்சாதன பெட்டிகள் உள்பட அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. தமிழகத்தில் முதியோர் அதிகளவில் உள்ளனர்.

இது ஒரு தேசிய திட்டம். அதன்படி முன்கள பணியாளர்கள், முதியோர்கள், இணை நோய் உள்ளவர்கள் என தடுப்பூசி போடப்படும். ஒரு மையத்தில் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒரே நேரத்தில் தடுப்பூசி போட முடியாது. மேலும் இந்த தடுப்பூசி ஒரே நாளில் அனைவருக்கும் போட வேண்டும் என்பது கிடையாது. அதன்படி அனைத்து பணிகளும் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது.

அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடுவதற்காக 47 ஆயிரம் மையங்கள் தயாராக உள்ளன. ஆனால் அதே நேரத்தில் மத்திய அரசு எவ்வளவு தடுப்பு மருந்துகளை வழங்குகிறதோ, அதன் அடிப்படையிலே தடுப்பூசி போடப்படும். 10 லட்சம் மருந்துகள் கொடுத்தால், கூட அதற்கு ஏற்றவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page