வீட்டில் தனியாக இருந்த போலீஸ்காரர் மனைவியிடம் கொரோனா பரிசோதனை செய்வதுபோல் நகை, பணம் கொள்ளை

Spread the love

வீட்டில் தனியாக இருந்த போலீஸ்காரர் மனைவியிடம் கொரோனா பரிசோதனை செய்வதுபோல் நடித்து நகை, பணத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றுவிட்டனர்.


ஆவடி,

திருமுல்லைவாயல் சத்தியமூர்த்தி நகரில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் தர்மராஜ் (வயது 27). இவர், ஆவடி அருகே உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை 3-ம் பட்டாலியனில் போலீசாக பணியாற்றி வருகிறார்.

இவருடைய மனைவி சந்திரலேகா (24). இவர்களுக்கு மதியழகன் (4) என்ற ஒரு மகன் உள்ளார். தற்போது சந்திரலேகா, 6 மாத கர்ப்பிணியாக உள்ளதாக கூறப்படுகிறது.

 

நேற்று மாலை 3.30 மணியளவில் போலீஸ்காரர் தர்மராஜ் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் சந்திரலேகா தனது மகனுடன் தனியாக இருந்தார்.

கொரோனா பரிசோதனை

தர்மராஜ் வேலைக்கு சென்ற சிறிதுநேரத்தில் சந்திரலேகா வீட்டுக்கு சுகாதார பணியாளர்கள்போல் 30 வயது மதிக்கத்தக்க 2 பேர் கொரோனா கவச உடை, முககவசம் அணிந்து வந்தனர்.

சந்திரலேகாவிடம் அவர்கள், கொரோனா பரிசோதனை செய்ய வந்துள்ளதாக கூறினர். அதை நம்பிய அவர், அதற்கு சம்மதம் தெரிவித்தார். மர்மநபர்கள், சந்திரலேகாவின் மூக்கில் கொரோனா பரிசோதனை எடுப்பதை போன்று ஏதோ குச்சி போன்று ஒன்றை வைத்ததும் அவர் மயங்கி விழுந்துவிட்டார்.

நகை-பணம் திருட்டு

சுமார் 10 நிமிடங்கள் கழித்து சந்திரலேகா மயக்கம் தெளிந்து எழுந்து பார்த்தபோது கொரோனா பரிசோதனை செய்ய வந்த 2 பேரையும் காணவில்லை. வீட்டின் பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த 5½ பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச்சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர்தான் மர்மநபர்கள் கொரோனா பரிசோதனை செய்வதுபோல் நடித்து வீட்டில் இருந்த நகை, பணத்தை திருடிச்சென்றது தெரிந்தது. இதுபற்றி திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page