பொதுத்தேர்வுக்கு முன்பு 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவது சாத்தியம் இல்லை என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி,
கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்டுள்ள 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது குறித்து மாநிலங்களுடன் நேற்று முன்தினம் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. இதில், பொதுத்தேர்வுக்கு முன் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என பல மாநிலங்கள் மத்திய அரசை அறிவுறுத்தின.
பல மாணவர்கள் 17½ வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்கும் நிலையில், அவர்களுக்கு கோவிஷீல்டு அல்லது கோவேக்சின் தடுப்பூசி போடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மருத்துவ நிபுணர்களுடன் மத்திய அரசு ஆலோசிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.
இந்த நிலையில் மாநிலங்களின் இந்த பரிந்துரை குறித்து மருத்துவ நிபுணர்கள் பலர் நேற்று தங்கள் கருத்துகளை வெளியிட்டனர். அதில் பலரும், தேர்வுக்கு முன்பு மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவது முக்கியமானதுதான் என ஒப்புக்கொண்டனர். ஆனால் தற்போதைய நிலையில் இது நடைமுறை சாத்தியம் இல்லை என்பதையும் அவர்கள் விளக்கினர். அதாவது, மேற்படி வயதினருக்கு பயன்படுத்துவதற்கான உரிமம் பெற்ற தடுப்பூசிகள் இருந்தால் மட்டுமே அதை போட முடியும் என கூறிய நிபுணர்கள், இந்தியாவில் தற்போது பயன்படுத்தப்படும் 2 தடுப்பூசிகளும் அதற்கான பரிசோதனையை இன்னும் முடிக்கவில்லை என்றும் கூறினர்.
பைசர் தடுப்பூசி மட்டுமே 12 வயதுக்கு மேற்பட்டவர்களும் பயன்படுத்துவதற்கான உரிமம் பெற்றிருப்பதாக கூறிய அவர்கள், அந்த தடுப்பூசி இந்தியாவில் இன்னும் ஒப்புதல் பெறவில்லை என்றும் தெரிவித்தனர்.