கொரோனா இரண்டாம் அலைக்கு எதிராக போராடி வரும் நிலையில், யாஸ் புயல் பெரும் சவாலாக உள்ளதாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் வேதனை தெரிவித்துள்ளார்.
வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி ஒடிசாவின் பாலசோர் அருகே பாரதீப் மற்றும் சாகர் தீவுக்கு இடையே நாளை மதியம் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயலுக்கு யாஸ் என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த புயல் அதிதீவிர புயலாக மாற வாய்ப்பு உள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த புயலால் மணிக்கு 165 கி.மீ. முதல் 185 கி.மீ. வரையிலான வேகத்தில் காற்று வீசக்கூடும்.
புயல் தாக்கத்தால் மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து, புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்புடைய மாநிலங்கள் எடுத்து வருகின்றன.
யாஸ் புயலை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல நகரங்களில் இருந்து செல்லும் ரெயில்களின் சேவையை வரும் 29ந்தேதி வரை கிழக்கு ரெயில்வே ரத்து செய்துள்ளது.
இந்நிலையில் யாஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பேசிய முதல்-மந்திரி நவீன் பட்நாயக் கூறியதாவது: “கொரோனா இரண்டாம் அலைக்கு எதிராக போராடி வரும் நிலையில், ‘யாஸ்’ புயல் பெரும் சவாலாக உள்ளது.
மக்களைக் காக்க வேண்டியது அரசின் கடமை. புயலால் பாதிப்பிற்குள்ளான பகுதிகளில் உள்ள மக்கள் அரசு அமைத்துள்ள முகாம்களில் தங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். புயலுக்கு எதிரான அரசின் நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.