ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருட்களை தங்குதடையின்றி வினியோகம் செய்ய வேண்டும் மு.க.ஸ்டாலின் உத்தரவு

Spread the love

காய்கறி, பழங்கள், பால் போன்ற அத்தியாவசிய பொருட்களை ஊரடங்கு காலத்தில் தங்குதடையின்றி வினியோகம் செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


சென்னை,

கொரோனா நோய்த் தொற்றினைத் தடுக்கும் வகையில், 24-5-2021 (நேற்று முன்தினம்) முதல் ஒரு வார காலத்திற்கு முழுமையாக எவ்வித தளர்வுகளுமின்றி தமிழ்நாட்டில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதன் அடிப்படையில், பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், பால் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று ஏற்கனவே ஆணையிட்டிருந்தார்.

அதன் தொடர்ச்சியாக, முழு ஊரடங்கு காலத்தில் அத்தியாவசியப் பொருட்களை தங்கு தடையின்றி வழங்கப்படுவது தொடர்பான ஆய்வு கூட்டம் நேற்று தலைமைச் செயலகத்தில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

காய்கறி, பழங்கள் வினியோகம்

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், ஏற்கனவே வழங்கியுள்ள அறிவுரையின்படி, தோட்டக்கலைத் துறை, வேளாண்மைத் துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள், ஆவின் நிறுவனம் மற்றும் மின் வணிக நிறுவனங்கள் மூலமாக சென்னை மாநகராட்சி மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வாகனங்கள் மூலமாக காய்கறிகள், பழங்கள், பால் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் பொதுமக்களுக்கு எவ்வித தடையுமின்றி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

சென்னையைப் பொறுத்தவரை, 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளுக்கே நேரடியாக வாகனங்களில் சென்று வணிகர் சங்கத்தினரின் உதவியுடன் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

4,900 டன் விற்பனை

அதன்படி, 24-5-2021 அன்று சென்னையில் 1,670 வாகனங்கள் மூலம் 1,400 டன்னும், இதர மாவட்டங்களில் 4,626 வாகனங்கள் மூலம் 3,500 டன்னும், ஆக மொத்தம் 6,296 வாகனங்கள் மூலம் 4,900 டன் காய்கறிகளும், பழங்களும் வினியோகம் செய்யப்பட்டன.

நேற்று நடைபெற்ற கூட்டத்தில், பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், பால் போன்றஅத்தியாவசியப் பொருட்கள் தொடர்புடைய துறைகள் மூலமாக சென்னை நகரத்திலும், அனைத்து மாவட்டங்களிலும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலமாக வழங்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

மு.க.ஸ்டாலின் அறிவுரை

இந்த சேவை நகர்ப்புறங்களில் சிறப்பாக வழங்கப்படுவதைப் போலவே, கிராமப்புறங்களிலும் வழங்கப்படுவதை கட்டாயம் உறுதி செய்யவேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். மேலும், நேற்று, 13,096 வாகனங்கள் மூலம் சென்று 6,509 டன் அளவிலான காய்கறிகளையும், பழங்களையும் வினியோகம் செய்ய அரசால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொதுமக்களின் வசதிக்காக, அடுத்து வரும் நாட்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் போதுமான அளவில் தொடர்ந்து நியாயமான விலையில் கிடைத்திட, தொடர்புடைய துறைகள் நடவடிக்கை எடுக்குமாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் இறையன்பு, வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் கே.கோபால், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page