கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அனுமதியின்றி அணை கட்டப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைத்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் சுமார் ரூ.9 ஆயிரம் கோடி செலவில் அணை கட்டுவதற்கான பணியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இதன்மூலம் பெங்களூரு பெருநகர பகுதிக்கு 4.75 டி.எம்.சி. தண்ணீரை குடிநீர் பயன்பாட்டுக்கு வழங்கவும், 400 மெகாவாட் மின் உற்பத்தியை மேற்கொள்ளவும் கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
மேகதாதுவில் அணை கட்டும்பட்சத்தில் அது தமிழகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும், குறிப்பாக காவிரி டெல்டா விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று கூறி இந்த திட்டத்துக்கு தமிழக அரசு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது. அதேவேளையில் இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டையும் நாடி உள்ளது.
வனப்பகுதி பாதிப்பு
இந்தநிலையில் மேகதாது அணை குறித்து ஆங்கில பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகி இருந்தது.
அதில், ‘மேகதாதுவில் அணை கட்டுவதன் மூலம் அருகில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி மற்றும் வனவிலங்கு சரணாலயம் போன்றவற்றுக்கு பாதிப்பு ஏற்படும். இந்த திட்டத்துக்கு வனப் பாதுகாப்பு சட்டம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் முறையாக பெறப்படவில்லை. இந்த திட்டம் நிறைவேற்றப்படும்பட்சத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி மற்றும் வனவிலங்கு சரணாலயம் மட்டுமல்லாமல், இதை ஒட்டி உள்ள 5 ஆயிரத்து 252 எக்டேர் பரப்பளவு நிலங்கள் பாதிக்கப்படும்’ என்று கூறப்பட்டிருந்தது.
விளக்கம் அளிக்க வேண்டும்
இதைத்தொடர்ந்து, இந்த விவகாரத்தை சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதிபதி கே.ராமகிருஷ்ணன், உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தனர்.
பின்னர் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
மேகதாது அணை கட்டுவதன் மூலம் சுற்றுச்சூழல் பாதிக்கப்படலாம் என்ற கேள்வி எழுந்துள்ளதால் தீர்ப்பாயம் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டியது உள்ளது. எனவே, இந்த விவகாரம் தொடர்பாக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், மத்திய நீர் ஆணையம், கர்நாடகா மற்றும் தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.
நிபுணர் குழு
அதேவேளையில் பெங்களூருவில் உள்ள சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த மண்டல அலுவலகம், காவிரி மேலாண்மை ஆணையம், கர்நாடக அரசின் காவிரி நீராவரி நிகாம் லிமிடெட் நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் மூத்த அதிகாரிகள் 3 பேர், கர்நாடக வனத்துறை சார்பில் கூடுதல் வனப்பாதுகாவலர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி ஆகியோரை கொண்ட நிபுணர் குழு ஏற்படுத்தப்படுகிறது.
இந்தக்குழு வனப் பாதுகாப்பு சட்டம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் பெறாமல் அணை கட்டப்படுகிறதா என்றும், மேகதாது அணை திட்டத்துக்கு ஏதேனும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தால் அதன்மூலம் சுற்றுச்சூழலுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்றும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
இழப்பீடு
ஆய்வின்போது, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டால் அதற்கான இழப்பீட்டுத் தொகையை நிர்ணயிக்க வேண்டும். அந்தத் தொகை, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்திய அலுவலர்களால் செலுத்தப்பட வேண்டும்.
கர்நாடக மாநிலத்தின் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் இந்த குழுவுக்கு ஒருங்கிணைப்பு அதிகாரியாக செயல்பட்டு தேவையான உதவிகளை செய்துகொடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.