ஒருநாள் பாதிப்பில் சென்னையை மிஞ்சியது – கோவை

Spread the love

தமிழகத்தில் கொரோனா தொற்று கால் பதித்ததில் இருந்து நேற்று முன்தினம் வரை தினசரி பாதிப்பு எண்ணிக்கையில் மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னையே முதலில் இடத்தில் இருந்து வந்தது.

ஒருநாள் பாதிப்பில் சென்னையை மிஞ்சியது – கோவையில் கொரோனா தொற்று அதிகரிக்க காரணம் என்ன?

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவை மாவட்டத்தில் 40 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு விவசாயம், சிறு, குறு தொழில்கள், பஞ்சாலைகள், விசைத்தறி தொழில்கள் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது.

கடந்த ஆண்டு கொரோனா தொற்று உருவான போது கோவை மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை மிகவும் குறைவாகவே காணப்பட்டது. மேலும் மாவட்ட நிர்வாகம் எடுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் தொற்று பரவலும் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது கொரோனா தொற்றின் 2-வது அலை தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பாதிப்பு குறைந்து வந்தாலும் கோவை மாவட்டத்தில் மட்டும் கொரோனா தொற்றின் 2-வது அலை கோர தாண்டவம் ஆடி வருகிறது. நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம், 3,500 என உச்சம் தொட்டு வந்த கொரோனா பாதிப்பு நேற்று புதிய மோசமான சாதனையை படைத்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று கால் பதித்ததில் இருந்து நேற்று முன்தினம் வரை தினசரி பாதிப்பு எண்ணிக்கையில் மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னையே முதலில் இடத்தில் இருந்து வந்தது.

ஆனால் நேற்று மாலை சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலில் பாதிப்பு எண்ணிக்கையில் இதுவரை முதலில் இடத்தில் இருந்த சென்னையை பின்னுக்கு தள்ளி விட்டு கோவை மாவட்டம் முதலிடத்தை பிடித்து மோசமான சாதனையை படைத்துள்ளது. நேற்று ஒரே நாளில் கோவையில் 4,268 பேருக்கு தொற்று உறுதியாகி மாநில அளவில் முதலிடத்தில் உள்ளது. ஆனால் சென்னையில் 3,561 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவ தொடங்கியதில் இருந்து இப்போது தான் கோவையில் பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 77 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

மக்கள் தொகை அடிப்படையில் சென்னையுடன், கோவையை ஒப்பிடுகையில் நோய் தொற்று மிகவும் அதிகமாக உள்ளது. மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் தினந்தோறும் பாதிப்பு அதிகரித்த வண்ணமே சென்று கொண்டுள்ளது.

இதற்கு பல்வேறு காரணங்களை பலரும் கூறி வந்தாலும் கொரோனா பரவலுக்காக முக்கிய காரணங்களாக சில சொல்லப்படுகின்றன.

கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று பாதிப்பு உருவான போது ஒரு வீட்டில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் உடனடியாக சுகாதாரத்துறையினர் அவர்களின் வீட்டிற்கு சென்று அவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்த முடியுமா என பார்க்கின்றனர். அவர்களை வீட்டில் தனிமைப்படுத்த தனி அறை, தனி கழிவறை வசதி உள்ளதா? என ஆய்வு செய்கின்றனர். அப்படி இருந்தால் மட்டுமே அவர்களை வீட்டில் தனிமையில் இருக்க அறிவுறுத்துகின்றனர். இல்லையென்றால் அவர்களை உடனடியாக ஆஸ்பத்திரி அல்லது கொரோனா சிகிச்சை மையங்களில் அனுமதித்து கண்காணித்தனர். மேலும் வீடுகளில் தனிமையில் உள்ளவர்களையும் அவ்வப்போது கண்காணித்து வந்தனர். மேலும் அவர்களது வீட்டில் இருந்தவர்கள், தொடர்பில் இருந்தவர்கள் என அனைவரின் விபரங்களையும் கணக்கெடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இதன் காரணமாக கடந்த ஆண்டு கொரோனா தொற்று கோவை மாவட்டத்தில் குறைந்தே காணப்பட்டது.

ஆனால் தற்போது அந்த மாதிரியான எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் சர்வ சாதாரணமாக வெளியில் சுற்றி திரிகின்றனர். இதுவும் கொரோனா தொற்று பரவுவதற்கு காரணமாக உள்ளது.

கோவையில் அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களில் மக்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்கின்றனர். ஆனால் பரிசோதனை முடிவுகள் வர மிகவும் தாமதமாகிறது. இதுவும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. கேரளாவில் உச்சத்தில் கொரோனா இருந்த போது அங்குள்ள பலர் இங்கு வந்து வியாபாரத்தில் ஈடுபட்டதும் கோவை மாவட்டத்தில் தொற்று அதிகரிக்க காரணம் என சொல்லப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page