ஆஸ்திரேலியா நாட்டின் விக்டோரியா மாகாணத்தில் கொரோனா பாதிப்பு உயர்வால் இன்றிரவு முதல் 7 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.
மெல்போர்ன்,
ஆஸ்திரேலியா நாட்டில் 2வது அதிக மக்கள் தொகை கொண்ட விக்டோரியா மாகாணத்தின் தலைநகர் மெல்போர்னில் அதிவேக கொரோனா பரவல் ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி விக்டோரியா மாகாண தலைவர் ஜேம்ஸ் மெர்லினோ கூறும்பொழுது, நாட்டுக்கு திரும்பிய பயணி ஒருவரால் பி.1.617 வகை கொரோனா பரவல் அதிகரித்து உள்ளது.
முதல்நிலை மற்றும் 2வது நிலையில் இந்த வைரசுடன் தொடர்புடைய 10 ஆயிரம் பேர் கண்டறியப்பட்டு உள்ளனர். இது கடந்த ஆண்டு பலத்த சேதம் ஏற்படுத்திய ஏற்பட்ட 2வது அலையை நினைவுப்படுத்துகிறது.
விக்டோரியாவை சுற்றி 150க்கும் மேற்பட்ட இடங்கள் பரவலுக்கான இடங்களாக அறியப்பட்டு உள்ளன. அதனால் இது செயல்பட வேண்டிய நேரம். இந்நேரத்தில் நீண்டகால காத்திருப்பு நம்மை துயரத்தில் ஆழ்த்தி விடும். அதனால், இன்றிரவு முதல் 7 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என கூறியுள்ளார்.
இதனால் அடுத்த 7 நாட்களுக்கு, விக்டோரியாவாசிகள் வீட்டிலேயே இருக்கும்படி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது. அத்தியாவசிய பணிகள், கடைகளுக்கு செல்வது, உடற்பயிற்சி, தடுப்பூசி போட்டு கொள்வது போன்றவற்றுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
இதேபோன்று, மக்கள் ஒன்றாக கூடுவதற்கோ அல்லது வீட்டில் இருந்து 5 கி.மீ.க்கு மேல் பயணிக்கவோ அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. முக கவசம் அணிவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.