செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை குத்தகைக்கு தர வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக ஏற்பட்டுள்ள தொற்று பரவல் அதிகரிப்பால், அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
குறிப்பாக கொரோனா தடுப்பூசி அனைவரும் செலுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை தமிழக அரசு ஏற்படுத்தி வருகிறது. தடுப்பூசி பொறுத்த வரையில் மத்திய அரசு ஒதுக்கீடு செய்த தடுப்புசி போதாது என்ற நிலையில் தமிழக அரசு உலகளாவிய டெண்டர் கோரியுள்ளது.
தடுப்பூசி தயாரிப்பில் சில நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் மத்திய அரசால் ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம் கடந்த 2012-ம் ஆண்டு துவங்கப்பட்டது. ஆனால், தற்போது வரையில் செயல்படாம தொடர்ந்து கிடப்பிலேயே உள்ளது. இதனிடையே செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
இந்த சூழலில் செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனத்தை தமிழகத்திற்கு ஒதுக்க வலியுறுத்துவதற்காக தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் டெல்லி சென்றுள்ளனர். அங்கு மத்திய தொழில்துறை மந்திரி பியூஷ் கோயலை சந்தித்து பேச உள்ளார்.
இந்நிலையில் செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை குத்தகைக்கு தர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பான அந்த கடிதத்தில், தடுப்பூசி தயாரிக்கும் மையத்தை முழு சுதந்திரத்துடன் தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் தமிழகத்திடம் தடுப்பூசி மையத்தை ஒப்படைத்தால் உடனடியாக தடுப்பூசி உற்பத்தி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.