அவங்க அப்பாவால் கூட என்னை கைது செய்ய முடியாது – பாபா ராம் தேவ்

Spread the love

அவங்க அப்பாவால் கூட என்னை கைது செய்ய முடியாது என பாபா ராம் தேவ் பேசியிருக்கும் வீடியோ மேலும் சர்ச்சையாகியுள்ளது.


புதுடெல்லி,

யோகா குரு பாபா ராம்தேவ் சமீபத்தில் ஆங்கில மருத்துவமான அலோபதி மருத்துவத்துக்கு எதிராக சில சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து இருந்தார். மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் அறிவுறுத்தலின் பேரில் அவர் தனது கருத்துகளை வாபஸ் பெற்றுக்கொண்டார்.

இந்தநிலையில் இந்த சர்ச்சை முடிந்த சிலநாட்களுக்குள் பாபா ராம் தேவ் மீண்டும் பேசி உள்ளார். சமீபத்தில் பாபா ராம்தேவ் பேசிய வீடியோவில், “ அலோபதி மருத்துவத்தாலும், தடுப்பூசியாலும் 10 ஆயிரம் மருத்துவர்கள், லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா சிகிச்சையில் அலோபதி மருத்துவ முறை முற்றிலும் முட்டாள்தனமானது என்றும், இந்த முறையை நீக்கிவிட்டு ஆயுர்வேத முறையை அமல்படுத்த வேண்டும் என்றும் பாபா ராம்தேவ் விமர்சனம் செய்தார்.

இதுதொடர்பாக பாபா ராம்தேவ் 15 நாள்களுக்குள் மன்னிப்பு கோர வேண்டும், இல்லையெனில் ரூ. 1,000 கோடி நஷ்டஈடு கோரி அவதூறு வழக்கு தொடரப்படும் என்றும் இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) சார்பில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுதவிர, தேசவிரோத குற்றச்சாட்டில் அவர் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஐஎம்ஏ கடிதம் எழுதியுள்ளது.

இந்த நிலையில் பாபா ராம்தேவின் மற்றொரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி மேலும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

அந்த வீடியோவில், “அவங்க அப்பனால் கூட என்னைக் கைது செய்ய முடியாது. அவர்கள் சும்மா கத்திக்கொண்டு இருக்கிறார்கள்” என்று ராம்தேவ் பேசுகிறார்.

இந்த வீடியோ பற்றி டோராடூனில் உள்ள மருத்துவர் ஒருவர் தெரிவிக்கையில், “ராம்தேவின் பேச்சு முழுக்க முழுக்க ஆணவத்தின் வெளிப்பாடு. அவர் தன்னை சட்டத்துக்கு அப்பாற்பட்டவராக எண்ணிக்கொள்வதையே இது காட்டுகிறது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page