ஜூன் 1-ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்பு முறை தொடங்கும் என்று கேரள கல்வித் துறை மந்திரி சிவன்குட்டி தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்,
பள்ளிகள் அனைத்தும் திறக்காமல் உள்ள நிலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி உள்ளிட்ட தொலைக்காட்சிகள் வாயிலாகவும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் வாயிலாகவும் கற்பித்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில் கேரளாவில் வரும் புதிய கல்வியாண்டு ஜூன் 1-ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்பு முறையில் தொடங்கும் என்று கேரள கல்வித் துறை அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
தற்போது உள்ள சூழ்நிலையில் யார் ஒருவரும் பள்ளிக்குச் சென்று பயிலுவது என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாது, கடந்த ஆண்டைப் போல பள்ளிச் செல்லாமல் ஆன்லைன் மூலமே கல்வி கற்கும் முறை வரும் கல்வியாண்டிலும் தொடரும். 70% பாடப்புத்தகங்கள் விநியோகத்திற்கு தயாராக உள்ளன.
பள்ளி வகுப்புகள் அனைத்தும் அரசின் கல்வி தொலைக்காட்சி வாயிலாக நடைபெறும். வகுப்புகளை ஆர்வத்துடன் கவனிக்கும் வகையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனை ஜூன் 1-ஆம் தேதி கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தொடங்கி வைக்கிறார்.