இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக் கொண்டார்.
சென்னை,
இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை, உலகின் பிற எந்த நாட்டிலும் ஏற்பட்டிராத வகையில் சுனாமி அலைகள் போல தாக்கி வருகிறது. இந்தியாவில் 4 லட்சத்துக்கும் அதிகமானோரை இந்த கொடிய தொற்று தாக்கி வந்தது.
நாட்டில் பல்வேறு மாநிலங்களில் தளர்வில்லா ஊரடங்குகள், கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பு, பொதுமக்களிடம் தற்போது ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு ஆகியவற்றின் காரணமாக தொற்று பாதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.
இந்தநிலையில் இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை 20 கோடியைக் கடந்துள்ளது. நேற்று காலை வரை 20,06,62,456 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. பிரபலங்கள் பலரும் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில் இந்திய அணியில் விளையாடி வரும் தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன், கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டுள்ளார். இதுபற்றி டுவிட்டரில் அவர் கூறியதாவது:-
இன்று காலையில் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டேன். தங்கள் உயிரைப் பற்றி கவலைப்படாமல் அயராது உழைக்கும் நம்முடைய சுகாதாரப் பணியாளர்களுக்கு மிகவும் நன்றி என்று கூறியுள்ளார்.
ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வரும் நடராஜன், முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.