கோவேக்சின் தடுப்பூசியை உற்பத்தி செய்து வினியோகத்துக்கு வழங்க 4 மாத காலம் ஆகிறது என்று அதை உற்பத்தி செய்கிற பாரத் பயோடெக் நிறுவனம் திடீர் விளக்கம் அளித்துள்ளது.
ஐதராபாத்,
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான உலகின் மாபெரும் தடுப்பூசி திட்டத்தை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. கடந்த ஜனவரி 16-ந் தேதி நடைமுறைக்கு வந்துள்ள இந்த திட்டத்தின் கீழ் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு வினியோகம் செய்து வருகிறது. பல மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை நிறைவேற்றுவதில் தாமதம் நிலவுகிறது.
இந்த நிலையில் கோவேக்சின் தடுப்பூசியினை தயாரித்து வழங்குகிற பாரத் பயோடெக் நிறுவனம், தடுப்பூசி உற்பத்தி மற்றும் வினியோகம் குறித்து நேற்று திடீரென ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:-
* தொழில்நுட்ப கட்டமைப்பு மற்றும் ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களை நிறைவேற்றுவதற்கு ஏற்ப கோவேக்சின் தடுப்பூசி உற்பத்தி, சோதனை, வினியோகத்துக்கான விடுவிப்பு ஆகியவற்றுக்கு 120 நாட்கள் ஆகின்றன.
* மார்ச் மாதத்தில் உற்பத்திக்கு தயாராகும் தடுப்பூசி தொகுதிகள், ஜூன் மாதத்தில்தான் வினியோகத்துக்கு தயாராகும்.
* கோவேக்சின் தடுப்பூசியை உற்பத்தி செய்து, பொதுமக்களுக்கு செலுத்துவதற்கு தயாராக அனுப்புவதற்கு 4 மாதங்கள் ஆகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.