சென்னையில் பத்திரிகையாளர்கள் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. அதையடுத்து 3 பேருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை,
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில், தமிழகத்தில் சென்னை முதலிடத்தில் உள்ளது. இந்தநிலையில் சென்னையில் தினசரி நாளிதழ் ஒன்றில் பணியாற்றி வரும் 24 வயது நிருபருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இவர் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்தார். அவருக்கு கடந்த 17-ந்தேதி கடும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
அப்போது அவரின் சளி மற்றும் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு நேற்று முன்தினம் கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து அவர் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தங்கி இருந்த விடுதி மற்றும் தெருவுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு, அவருடன் விடுதியில் இருந்த 7 பத்திரிகையாளர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோரை மாநகராட்சி அதிகாரிகள் தனிமைப்படுத்தி உள்ளனர்.
இதைப்போல் சென்னையில் உள்ள செய்தி தொலைக்காட்சி நிறுவனத்தில் உதவி ஆசிரியராக பணிபுரிபவருக்கும் (வயது 25) கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ராயபுரம் போலீஸ் குடியிருப்பைச் சேர்ந்த அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது குடும்பத்தினரும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர்.
இதனிடையே மற்றொரு செய்தி தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றி வரும் 25 வயது நபருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.