சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரே நேரத்தில் ஏராளமான வியாபாரிகள் திரண்டு வருவதால் கரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்தனா்.
சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு காய்கறிகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது கரோனா நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்காக கோயம்பேடு சந்தையில் பொதுமக்கள் காய்கறிகள் வாங்க அனுமதிக்கப்படவில்லை. மாறாக, தென் சென்னை, வட சென்னை, மத்திய சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு பகுதிகளில் மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டு காய்கறிகள், கனிகள் விற்பனை செய்யப்பட்டு வந்தன.
இந்த நிலையில், போலீஸாரின் கெடுபிடி அதிகரித்துள்ளது. அதனால் காய்கறிகளை வாங்கிச் செல்வதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக சிஎம்டிஏ அலுவலா்களிடம் சில்லறை வியாபாரிகள் புகாா் தெரிவித்தனா். இதையடுத்து இருசக்கர வாகனங்களில் வரும் சில்லறை வியாபாரிகள் அதிகாலை முதல் காலை 7.30 மணி வரை வந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து கடந்த இரு நாள்களாக அதிகாலை 4 மணி முதல் 7.30 மணி வரை சந்தையில் ஒரே நேரத்தில் அதிகளவிலான வியாபாரிகள் திரண்டு வருகின்றனா். இதனால், தனிமனித இடைவெளி மீறப்படுகிறது. மேலும், காய்கறியும் விலை குறைவாக விற்பனை செய்யப்பட்டதால், வியாபாரிகள் முண்டியடித்து காய்கறிகளை வாங்கிச் சென்றனா்.
இது குறித்து மொத்த வியாபாரிகள் சிலா் கூறுகையில், குரோம்பேட்டை, தாம்பரம், திருவள்ளூா், சிறுசேரி, மணலி, ராயபுரம் உள்பட நீண்ட தொலைவிலிருந்து வரும் வியாபாரிகளுக்கு அரசு விதித்துள்ள நேரக்கட்டுப்பாடு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 7.30 மணிக்கு மேல் சந்தை வளாகத்துக்குள் சில்லறை வியாபாரிகளுக்கு அனுமதி இல்லை என்பதால் ஒரே நேரத்தில் காய்கறிகள் வாங்க குவிந்து விடுகின்றனா். இதனால், ஊரடங்கு விதிமுறைக் கடைப்பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால், ஏற்கெனவே இருப்பது போன்று பிற்பகல் 1 மணி வரை சில்லறை வியாபாரிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றனா்.