கொரோனாவால் தொழில்முறை வாழ்க்கையே மாறி விட்டதாகவும், நம் வீடே அலுவலகம், இணையதளமே சந்திப்பு அறை என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
பிரதமர் மோடி தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ், நமது தொழில்முறை வாழ்க்கையையே மாற்றி விட்டது. இப்போதெல்லாம் நமது வீடே அலுவலகமாகவும், இணையதளமே சந்திப்பு அறையாகவும் திகழ்கிறது.
நானும் இந்த மாற்றங்களுக்கு ஏற்ப என்னை மாற்றி கொண்டுள்ளேன். எனது மந்திரிசபை சகாக்களானாலும் சரி, அதிகாரிகளானாலும் சரி, உலக தலைவர்களானாலும் சரி, எல்லாரிடமும் காணொலி காட்சி மூலம்தான் சந்திப்பை நடத்துகிறேன். இதன்மூலம், சிக்கலான தருணங்களில் கூட நமது அலுவலகங்கள், வர்த்தகம் ஆகியவை வேகமாக இயங்க முடியும் என்பது தெளிவாகிறது. இன்று உலகமே வர்த்தக முன்னுதாரணத்தை தேடி ஓடி கொண்டிருக்கிறது. கண்டுபிடிப்புகளுக்கு பெயர் போன இளம் இந்தியா, புதிய பணி கலாசாரத்துக்கும் தலைமை தாங்க முடியும்.
கொரோனாவுக்கு பிந்தைய சூழ்நிலையில், நவீன பன்னாட்டு பொருள் வினியோக சந்தையில் உலகளாவிய மையமாக இந்தியா திகழ முடியும். இந்த வாய்ப்பை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
பணியிடங்களில் டிஜிட்டலுக்குத்தான் முதலிடம் அளிக்கப்படுகிறது. தொழில்நுட்ப புரட்சிகள், ஏழைகளின் வாழ்க்கையில் கூட மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
அதிகாரிகள் ஆதிக்கம், இடைத்தரகர் தலையீடு ஆகியவற்றை நீக்கி, நலப்பணிகளை விரைவுபடுத்துவது தொழில்நுட்பமே ஆகும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.