கொரோனாவால் உயிரிழந்தவர்கள் உடலை அடக்கம் செய்ய என் கல்லூரியின் ஒரு பகுதியைத் தருகிறேன்: விஜயகாந்த் அறிவிப்பு

Spread the love

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் உடலை அடக்கம் செய்ய என் கல்லூரியின் ஒரு பகுதியைத் தருகிறேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

சென்னை,

கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய ஆண்டாள் அழகர் கல்லூரியில் ஒரு பகுதியை ஒதுக்கித் தருவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-“கொரோனா பாதிப்பால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இந்த உலகில் பிறந்தவர்கள் யாராக இருந்தாலும் ஒரு நாள் நிச்சயமாக இறக்கத்தான் போகிறார்கள்.

இப்படி இருக்கும்போது மருத்துவத் துறையைத் தேர்ந்தெடுத்து மக்களுக்குச் சேவை செய்த ஒரு மருத்துவருக்கு இந்த நிலை என்றால் சாதாரண மனிதனின் நிலையை நாம் எண்ணிப் பார்க்கவேண்டும். கால்நடைகள் இறந்தாலே அதை மனிதாபிமானத்தோடு அடக்கம் செய்து உரிய மரியாதை செலுத்தி வரும் தமிழக மக்கள், தற்போது மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிப்பது மிகவும் வேதனையளிக்கிறது.

உடலை அடக்கம் செய்வதில் எந்தத் தொற்றும் ஏற்படாது என உலக சுகாதார நிறுவனமும், தமிழக அரசும் அறிவித்துள்ளன. ஆனால், மக்கள் தவறாகப் புரிந்துகொண்டு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உட்பட மருத்துவர்களைத் தாக்கியது கண்டனத்துக்குரியது. மக்கள் அனைவரும் மனிதாபிமானத்தோடு சிந்தித்து இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், உடலை அடக்கம் செய்வதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதை மக்களுக்கு தமிழக அரசு புரியவைக்க வேண்டும். கடவுளுக்கு அடுத்தபடியாக நான் கருதுவது மருத்துவர்களைத்தான். ஆனால் மக்கள் சேவை செய்யும் மருத்துவர்களுக்கு இந்த நிலை என்பது மனதிற்கு மிகுந்த வேதனை அளிக்கிறது.கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால். ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியின் ஒரு பகுதியை உடல் அடக்கம் செய்ய எடுத்துக் கொள்ளலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

முன்னதாக சென்னையில் நேற்று கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் உடலைப் புதைக்கச் சென்ற ஊழியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை பொதுமக்கள் கடுமையாகத் தாக்கினர். பின்னர் மருத்துவர் உடல் போலீஸ் உதவியுடன் புதைக்கப்பட்டது. தாக்குதல் நடத்தியதாக 20 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page