கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 1,553 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் இன்று பிற்பகல் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தபோது கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 1,553 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 36 இறப்புகள் பதிவாகியுள்ளன. தற்போது 17,265 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 543 ஆக உள்ளது. 2,546 பேர் (14.75%) குணமடைந்து வீட்டிற்குத் திரும்பியுள்ளனர்.
தென் கொரியாவில் இருந்து 5 லட்சம் விரைவு பரிசோதனைக் கருவிகள் விரைவில் வரவுள்ளன. கரோனா வைரஸ் இரட்டிப்பு விகிதம் ஊரடங்கிற்கு முன் 3.5 நாட்களாக இருந்த நிலையில், தற்போது 7.5 நாட்களாக உயர்ந்துள்ளது. பாதிப்பு இரட்டிப்பாக 7.5 நாட்கள் ஆகிறது. இதன் மூலமாக கரோனா பரவல் குறைந்துள்ளது தெரிகிறது.
அதேநேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,553 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது ஒருநாளில் இதுவே அதிக பாதிப்பாகும்.
கேரளம், ஒடிசா, கர்நாடகத்தில் கரோனா பாதிப்பு குறைந்துள்ளது. கோவாவில் ஒருவருக்குக் கூட கரோனா பாதிப்பு இல்லை’ என்று தெரிவித்தார்.
மேலும், ஸ்ரீவாஸ்தவா இணைச் செயலாளர் புன்யா சலிலா கூறுகையில், ‘ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஊரடங்கு உத்தரவுகளை மாநில அரசுகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்’ என்று தெரிவித்தார்.