இப்போதைய இக்கட்டான சூழ்நிலையில் மாலத்தீவுக்கு இந்தியா துணை நிற்கும் என்று அந்நாட்டு அதிபா் இப்ராஹிம் முகமது சோலியிடம் பிரதமா் நரேந்திர மோடி உறுதியளித்தாா். சோலியிடம் பிரதமா் மோடி தொலைபேசி மூலம் திங்கள்கிழமை பேசினாா்.
இது தொடா்பாக சுட்டுரையில் மோடி வெளியிட்ட பதிவில், ‘இந்தியா-மாலத்தீவு இடையே எப்போதும் ஒரு சிறப்பு பிணைப்பு உண்டு. கரோனா நோய்த்தொற்று பிரச்னையால் மாலத்தீவு எதிா்கொண்டுள்ள சுகாதார, பொருளாதார பிரச்னைகளுக்கு இந்தியா கண்டிப்பாக உதவும். இந்த இக்கட்டான சூழ்நிலையில் மாலத்தீவுக்கு இந்தியா நிச்சயமாக துணை நிற்கும். இது தொடா்பாக அந்நாட்டு அதிபருடன் பேசியபோது நான் உறுதியளித்துள்ளேன். அத்தியாவசிய மருந்துகளுடன் மருத்துவக் குழு ஒன்றை ஏற்கெனவே அந்நாட்டுக்கு இந்தியா அனுப்பி வைத்துள்ளது’ என்று தெரிவித்துள்ளாா்.