சென்னை,
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்ததால், கடந்த மாதம் 25-ந் தேதி முதல் நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் பரவுவது சமூகத் தொற்று நிலைக்கு உயர்ந்துவிடாமல் இருக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த 21 நாள் ஊரடங்கு கடந்த 14-ந் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், அன்று காலை 10 மணிக்கு தொலைக் காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவை மே மாதம் 3-ந் தேதி வரை மேலும் 19 நாட்களுக்கு நீட்டிப்பதாக அறிவித்தார். மேலும், 20-ந் தேதிக்கு பிறகு எந்தெந்த தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் இயங்கலாம் என்பது தொடர்பாக, மத்திய அரசு சார்பில் அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில், 15-ந் தேதி வெளியான மத்திய அரசின் அறிவிப்பில், 20-ந் தேதிக்கு பிறகு எந்தெந்த தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர சேவைகள் இயங்கலாம் என்பது குறித்து மாநில அரசுகளே முடிவு செய்து அறிவிக்கலாம் என்று கூறப்பட்டு இருந்தது.
இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள நிலைமையை ஆராய்ந்து முடிவெடுப்பதற்காக வல்லுநர் குழு ஒன்றை தமிழக அரசு நியமித்தது.
இந்த வல்லுநர் குழு நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தனது முதற்கட்ட அறிக்கையை சமர்ப்பித்தது.
அதன்பிறகு, தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், வல்லுநர் குழுவின் அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை செயல்படுத்துவது குறித்தும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், டாக்டர் சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார் மற்றும் தலைமைச் செயலாளர் க.சண்முகம், போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி, சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் மத்திய அரசு அறிவித்தபடி, மே மாதம் 3-ந் தேதிவரை தமிழகத்தில் ஊரடங்கையும், அதையொட்டி விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளையும் தளர்த்தாமல், நீட்டிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
பின்னர் இதுதொடர்பாக, தமிழக அரசின் சார்பில் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
15.4.2020 அன்று மத்திய அரசு வெளியிட்ட ஆணையில், 20.4.2020-க்கு பிறகு எந்தெந்த தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர சேவைகள் இயங்கலாம் என்பது பற்றி மாநில அரசு முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தது.
டெல்லி, கர்நாடகா, பஞ்சாப், தெலுங்கானா, மராட்டியம், குஜராத் போன்ற மாநிலங்கள், தற்போதுள்ள கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலினை கருத்தில் கொண்டு, நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் அனைத்தையும் தொடர்ந்து கடைப்பிடிக்க முடிவெடுத்து உள்ளன.
தமிழக அரசு முடிவு
தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்வு செய்வது குறித்து ஆராய, 16.4.2020 அன்று ஒரு வல்லுநர் குழுவை தமிழ்நாடு அரசு நியமித்து ஆணையிட்டு இருந்தது. அக்குழு, முதல் கூட்டத்தை நடத்தி, அதனுடைய முதற்கட்ட ஆலோசனைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் 20.4.2020 அன்று (நேற்று) சமர்ப்பித்தது. இந்த குழுவின் ஆலோசனைகள் கவனமாக ஆராயப்பட்டன.
அதன் அடிப்படையில், நோய்த் தொற்று மேலும் பரவுவதை தடுக்க கடும் நடவடிக்கைகளை தொடர்ந்து தீவிரப்படுத்த வேண்டியுள்ளதால், மாநில பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-ன்படி, தற்போது அமலில் உள்ள ஊரடங்கு மற்றும் இதர கட்டுப்பாடுகள் அனைத்தையும் மத்திய அரசு அறிவித்துள்ள 3.5.2020-ம் தேதிவரை தொடர்ந்து கடைப்பிடிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்து உள்ளது.
அத்தியாவசிய பணிகள் மற்றும் சேவைகளுக்கு ஏற்கனவே அரசால் அளிக்கப்பட்ட விதிவிலக்கு தொடரும். நோய்த் தொற்றின் தன்மையை மீண்டும் ஆராய்ந்து, நோய்த் தொற்று குறைந்தால், வல்லுநர் குழுவின் ஆலோசனையினை பெற்று, நிலைமைக்கு ஏற்றாற்போல் தகுந்த முடிவுகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.