மேற்கு வங்காளத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் விதம் குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு அமைக்கப்பட்டு இருப்பது பற்றி பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.
ஊரடங்கு பற்றி ஆய்வு செய்ய மத்திய குழு – பிரதமர் விளக்கம் அளிக்க மம்தா பானர்ஜி கோரிக்கை
கொல்கத்தா:
இந்தியாவில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள போதிலும், சில பகுதிகளில் கொரோனாவின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூர், மராட்டிய மாநிலம் மும்பை, புனே, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர், மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா, ஹவுரா, கிழக்கு மேதினிபூர், 24 வடக்கு பர்கானா, டார்ஜிலிங், கலிம்போங், ஜல்பைகுரி ஆகிய பகுதிகளில் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
ஊரடங்கு உத்தரவு
எனவே, இந்த நான்கு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் விதம் குறித்து, நிலைமையை நேரில் ஆய்வு செய்ய அமைச்சகங்களுக்கு இடையேயான 6 குழுக்களை மத்திய அரசு அமைத்து இருக்கிறது.
இந்த குழுக்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்துவது, சமூக விலகல், அத்தியாவசிய பொருட்கள் சப்ளையை உறுதி செய்வது, சுகாதார கட்டமைப்புகள், சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பு, தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களின் நிலைமை தொடர்பான சிபாரிசுகளை மத்திய அரசுக்கு வழங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த குழுக்கள் அமைக்கப்பட்டது தொடர்பாக மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு அளித்து வரும் ஆக்கப்பூர்வமான ஆதரவையும், யோசனைகளையும் நாங்கள் வரவேற்கிறோம். அதேசமயம் பேரழிவு மேலாண்மை சட்டத்தின் கீழ்
மத்திய குழுக்கள் ஆய்வு செய்ய மேற்கு வங்காளத்தில் உள்ள சில மாவட்டங்கள் உள்பட நாட்டில் பல்வேறு மாவட்டங்கள் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டன என்பது தெரியவேண்டும்.
எனவே இதுபற்றிய விவரங்களை பிரதமர் மோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும். சரியான காரணங்கள் தெரிவிக்கப்படாவிட்டால் இந்த நடவடிக்கை கூட்டாட்சி தத்துவத்துக்கு பொருத்தமற்றதாகவும், எனக்கு அச்சமளிப்பதாகவுமே இருக்கும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.