அதிகளவில் மருந்துகள் வாங்குபவர்கள் குறித்து தகவல் அளிக்குமாறு மருந்து கடைகளுக்கு அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
அதிகளவில் மருந்துகள் வாங்குபவர்கள் குறித்து தகவல் அளிக்க வேண்டும்- மருந்து கடைகளுக்கு அரசு உத்தரவு
மும்பை:
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் கடைகள் மட்டுமே திறந்துள்ளன. முக்கியமாக மருந்து கடைகள் தொடர்ந்து இயங்கி வருகின்றன. இந்தநிலையில் மருந்து கடை உரிமையாளர்களுக்கு உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை பிறப்பித்து உள்ள உத்தரவில் கூறியதாவது:-
ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து, புனேயில் சிலர் பீதியின் காரணமாக அதிக அளவில் மருந்துகளை வாங்கி குவிப்பதாக புகார்கள் எழுந்தன. எனவே மருந்து கடை உரிமையாளர்கள் யார்- யாருக்கு எந்தெந்த மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது என்ற விவரங்களை பதிவு செய்து வைத்து கொள்ள வேண்டும்.
குறிப்பாக காய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்றவற்றிற்கு வாங்கும் மருந்துகள் குறித்த தகவல்களை அவசியம் பதிவு செய்ய வேண்டும். இது தொடர்பாக சந்தேகத்துக்கு இடமாக அதிக மருந்துகள் வாங்கினால் அரசுக்கு தகவல் அளிக்க வேண்டும். சிலர் கொரோனா தொற்றை மறைக்க முயன்று அவர்களே மருந்து, மாத்திரைகளை வாங்கி சாப்பிடலாம். அவ்வாறு மறைக்க முயற்சிப்பவர்களை அடையாளம் காண முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.