மும்பை,
செவ்வாய்க்கிழமை அன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,011 புள்ளிகளை இழந்தது. நேற்று வர்த்தகம் முடிந்தபோது அனைத்து நிறுவனப் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.120.42 லட்சம் கோடியாக குறைந்தது.
பங்கு வியாபாரம் வீழ்ந்த நிலையில், மும்பை பங்குச்சந்தையில் நேற்று வங்கி துறை குறியீட்டு எண் அதிகபட்சமாக 5.52 சதவீதம் குறைந்தது. அடுத்து உலோக துறை குறியீட்டு எண் 5.29 சதவீதம் சரிந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறு வனப் பங்குகளில் 3 பங்குகளின் விலை உயர்ந்தது. 27 பங்குகளின் விலை சரிந்தது.
இந்தப் பட்டியலில் பார்தி ஏர்டெல், ஹீரோ மோட்டோகார்ப், நெஸ்லே இந்தியா ஆகிய 3 நிறுவன பங்குகளின் விலை ஏற்றம் கண்டது. அதே சமயம் இண்டஸ் இந்த் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, டாட்டா ஸ்டீல், மகிந்திரா அண்டு மகிந்திரா உள்பட 27 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.
மும்பை பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 1,011.29 புள்ளிகள் சரிவடைந்து 30,636.71 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 30,900.12 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 30,378.26 புள்ளி களுக்கும் சென்றது. மும்பை சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு செவ்வாய்க்கிழமை அன்று வர்த்தகம் முடிந்தபோது ரூ.120.42 லட்சம் கோடியாக இருந்தது. முந்தைய நாளின் இறுதியில் அது ரூ.123.72 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, பங்குகளின் மதிப்பு ரூ.3.30 லட்சம் கோடி குறைந்தது.
தேசிய பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் நிப்டி 280.40 புள்ளிகள் குறைந்து 8,981.45 புள்ளிகளில் முடிவுற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 9,044.40 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 8,909.40 புள்ளிகளுக்கும் சென்றது.