தொழிற்சாலை, மனித கழிவுகள் கலக்காததால் கங்கை சுத்தம் அடைந்தது

Spread the love

ஊரடங்கு எதிரொலியாக தொழிற்சாலை மற்றும் மனித கழிவுகள் கலக்காததால் கங்கை நீர் சுத்தமடைந்து இருக்கிறது என்று உத்தரகாண்ட் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்து இருக்கிறது.

ஹரித்வார்,

இந்தியாவின் தேசிய நதியான புனித கங்கை, இமயமலையில் புறப்பட்டு உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காள மாநிலங்கள் வழியாக வங்காள தேசத்தை நோக்கி பாய்கிறது.

ஹரித்வார், பிரயாக்ராஜ், வாரணாசி, ரிஷிகேஷ், கொல்கத்தா போன்ற பல நகரங்கள் அதன் பாதையில் இருக்கின்றன. இமயமலையில் தொடங்கும் போது புனித கங்கையாகப் புறப்பட்டாலும், இடையில் மனிதர்கள் செயலாலும், தொழிற்சாலைகளாலும் அது மாசுபட்டு விடுகிறது.

கங்கை நதியை சுத்தப்படுத்த மத்திய, மாநில அரசுகள் எத்தனையோ திட்டங்களை, எத்தனையோ கோடிகளில் நடைமுறைப்படுத்தி வருகின்றன. ஆனால் அதற்கான முழுப்பலன் இதுவரை கிடைக்காமல்தான் இருந்தது. தற்போது அதற்கான பலன் கிடைத்து இருக்கிறது.

ஆம்! கங்கை சுத்தம் அடைந்து இருக்கிறது. அதற்கு காரணம் கடந்த 25 நாட்களாகத் தொடரும் கொரோனா ஊரடங்குதானே தவிர அரசுகள் செலவழித்த கோடிகள் அல்ல. இதை மாசு கட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்து இருக்கிறது.

கங்கை நதி ஓரம் அமைந்து இருக்கும் புண்ணிய தலங்களான ஹரித்வார், ரிஷிகேஷ் நகரங்களுக்கு ஆண்டு முழுவதும் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் மொய்த்த வண்ணம் இருப்பார்கள். அவர்கள் படித்துறைகளில் இறங்கி கங்கையில் புனித நீராடிச் செல்வார்கள். இதுதவிர கங்கைநதி ஓரங்களில் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் இயங்குகின்றன.

தொழிற்சாலைகளின் கழிவுகளும், பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் மனிதக் கழிவுகளும் கங்கையை களங்கப்படுத்தி வந்தன.

தற்போது ஊரடங்கால் தொழிற்சாலைகள் இயங்கவில்லை. படித்துறைகள் மூடப்பட்டன. அந்தப் பகுதி வழியாக ஓடும் கங்கை நீர் அள்ளிப்பருகும் அளவில் சுத்தம் அடைந்து இருக்கிறது.

கங்கையில் கலக்கும் மனிதக் கழிவுகள் 34 சதவீதம் குறைந்து விட்டது. நீரில், உயிர் வேதி பிராணவாயுவின் (பயோகெமிக்கல் ஆக்ஸிஜன்) தேவை 20 சதவீதமாக குறைந்தது இருக்கிறது. உத்தரகாண்ட் தனி மாநிலமாக உருவான 2000 ஆண்டில் இருந்தே, ஹரித்வார் பகுதியில் ஓடும் கங்கை நீரின் தரம் ‘பி’ பிரிவில்தான் இருந்துவந்தது. தற்போது அதன் தரம் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவில், உயர்ந்து ‘ஏ’ பிரிவை அடைந்து இருக்கிறது.

தண்ணீரின் அமிலத் தன்மையை ஆங்கிலத்தில் ‘பி.எச்’ என்று குறிப்பிடுகிறார்கள். அதன்படி ஆற்றுநீரில், அமிலத் தன்மை 7.4 இருக்க வேண்டும்.

அவ்வாறு இருக்கும் போது, ஒரு லிட்டர் நீரில் 6 மில்லி கிராம் அளவில் ஆக்ஸிஜன் கரைந்து இருக்கும். இது நீர்வாழ் உயிரினங்களுக்கு நல்லது. தற்போது கங்கைநீர் அந்த இடத்தை பிடித்துள்ளது. அது நீர்வாழ் உயிரினங்களுக்கு மட்டும் அல்ல, மனிதர்களும் அந்த நீரை சாதாரணமாக ‘குளோரின்’ கலந்து குடிக்கலாம்.

மேற்கண்ட தகவலை உத்தரகாண்ட் மாநில சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை அதிகாரி எஸ்.எஸ். பால் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page