பாரீஸ்,
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை உலக அளவில் 1 லட்சத்து 74 ஆயிரத்தை தாண்டியது. இதில், மூன்றில் இரண்டு பங்கு உயிரிழப்புகள், ஐரோப்பா கண்டத்தில் நடந்துள்ளன. அங்கு 1 லட்சத்து 7 ஆயிரம்பேர் வரை பலியாகி உள்ளனர்.
அமெரிக்காவில் 43 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகி விட்டனர். இத்தாலியில் 24 ஆயிரத்துக்கு மேற்பட்டோரும், பிரான்ஸ் நாட்டில் 20 ஆயிரத்துக்கு மேற்பட்டோரும், இங்கிலாந்தில் 17 ஆயிரத்துக்கு மேற்பட்டோரும் பலியாகி உள்ளனர்.
உலக அளவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 25 லட்சத்தை தாண்டியுள்ளது. ஆனால், கடுமையாக பாதிக்கப்பட்டவர்களிடம் மட்டுமே பரிசோதனை நடத்தப்படுவதால், உண்மையான நோயாளிகள் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
ஸ்பெயின் நாட்டில் ஒரே நாளில் 430 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் பலி எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்துள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 4 ஆயிரத்தை தாண்டி விட்டது. எனினும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை 27-ந் தேதியில் இருந்து தளர்த்துவது குறித்து ஸ்பெயின் அரசு பரிசீலித்து வருகிறது.