தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அறவே இல்லை என்ற நிலை விரைவில் ஏற்படும் – சபாநாயகர் ப.தனபால் நம்பிக்கை

Spread the love

தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளால் கொரோனா பாதிப்பு அறவே இல்லை என்ற நிலை விரைவில் ஏற்படும் என்று சபாநாயகர் ப.தனபால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னை,

நாட்டின் அனைத்து மாநில சட்டசபை சபாநாயகர்களிடம் காணொலிக் காட்சி மூலம் நாடாளுமன்ற சபாநாயகர் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக சட்டசபை சபாநாயகர் ப.தனபால் ஆற்றிய உரை வருமாறு:-

கொரோனா உலக அளவில் பரவக்கூடிய தொற்று என்று கடந்த மார்ச் 11-ந் தேதியன்று உலக சுகாதார அமைப்பு அறிவிப்பதற்கு முன்பாகவே தமிழக முதல்-அமைச்சர் மார்ச் 9-ந் தேதியன்று அதன் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

அதைத்தொடர்ந்து பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகளுடன் அவர் நடத்தி வருகிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்துக்கு சிறப்பு தொகுப்பு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக ரூ.3,280 கோடியை முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.

அதன்படி ஏப்ரல், மே மாதங்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக அரசி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள், ஆயிரம் ரூபாய் தொகை போன்றவை வழங்கப்படுகின்றன.

பல்வேறு நல வாரிய உறுப்பினர்களான 14.57 லட்சம் பேருக்கு நிவாரணம் வழங்க ரூ.130 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. அமைப்பு சாரா தொழிலாளர்களும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகையை பெற்றுள்ளனர். 15 கிலோ அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும் அவர்கள் பெற்றுள்ளனர்.

வேறு மாநிலங்களில் இருந்து புலம் பெயர்ந்து தமிழகத்துக்கு வந்துள்ள தொழிலாளர்களுக்கு 15 கிலோ அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் போன்ற உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இடம் பெயர்ந்து வந்துள்ள தொழிலாளர்கள், வெளிமாநில மாணவர்கள், வயது முதிர்ந்தோர், மாற்றுத் திறனாளிகள், கைவிடப்பட்டவர்கள் என அனைவரின் நலனை பாதுகாக்க அரசு குழுக்களை அமைத்துள்ளது.

அனைவரும் சமூக இடைவெளி, சுத்தம், சுகாதாரத்தை கடைபிடிப்பதற்கு பெருமளவில் விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் சட்டசபை கூட்டத் தொடர் நடந்தபோது எனது அறிவுறுத்தலின்படி, கொரோனா தொற்று ஏற்படாத வகையில் அவையில் சுத்திகரிப்புப் பணிகள் நடத்தப்பட்டன.

தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லவே இல்லை என்ற நிலை விரைவில் ஏற்படும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page