என் கணவர் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யவேண்டும் – முதல்-அமைச்சருக்கு, டாக்டர் சைமனின் மனைவி உருக்கமான வேண்டுகோள்

Spread the love

அனாதைப்போல வேலங்காடு சுடுகாட்டில் புதைத்துவிட்டார்கள் என்றும், தன் கணவர் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யவேண்டும் என்றும் முதல்-அமைச்சருக்கு, டாக்டர் சைமனின் மனைவி உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை,

சென்னையில், கொரோனாவால் பாதிப்படைந்து உயிரிழந்த டாக்டர் சைமன் ஹெர்குலசின் மனைவி ஆனந்தி ‘தினத்தந்தி’ நிருபருக்கு அளித்த உருக்கமான பேட்டியில் கூறியதாவது:-

என்னுடைய கணவர் டாக்டர் சைமன் ஹெர்குலஸ் நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தை சேர்ந்தவர். ஏழைகள் மீது மிகவும் அன்பு, அக்கறை கொண்டவர். தன்னுடைய கடினமான உழைப்பால் மருத்துவத்தில் பல பட்டங்களை பெற்றுள்ளதோடு மட்டுமல்லாமல், மருத்துவத்தில் பல ஆராய்ச்சிகளை செய்து, எல்லோருடைய அன்பையும் பெற்று திகழ்ந்தவர். 2015-ம் ஆண்டு வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டபோது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல உதவிகளை செய்தவர். ஏறத்தாழ 60-க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்களை நடத்தி மருத்துவ உதவிகளை செய்தார்.

அவர் இப்போது பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஒரு ஆஸ்பத்திரி நடத்தி வந்தார். தினமும் ஏராளமான நோயாளிகளை பரிசோதிப்பது வழக்கம். வெளிநாட்டுக்கு எங்கும் சமீபத்தில் அவர் போனது இல்லை. எந்த வெளி இடங்களுக்கும் போனது இல்லை. ஆஸ்பத்திரியை விட்டால் வீடு, வீட்டை விட்டால் ஆஸ்பத்திரி இதை தவிர வேறு எங்கேயும் போகமாட்டார். இந்தநிலையில் அவர் பரிசோதித்த ஏதோ ஒரு நோயாளியிடம் இருந்து அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

இந்தநிலையில் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நன்றாக குணமடைந்த நேரத்தில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். நாங்கள் இதனை அறிந்து துடி துடித்துவிட்டோம். ஆனால் மிகவும் வேதனைக்குரிய செய்தி என்னவென்றால் அவருடைய உடலை ஒரு மரியாதையோடு அடக்கம் செய்ய முடியவில்லை. அதுவும் ஏறத்தாழ 30 ஆண்டுகளாக நாங்கள் அன்போடு வாழ்ந்து வந்த நிலையில், என்னால் என்னுடைய அன்பு கணவரின் உடல் அடக்கம் செய்தபோது பார்க்க முடியாத ஒரு துர்பாக்கியமான நிலை ஏற்பட்டது.

அவருடைய உடலை எங்கள் ஆஸ்பத்திரி ஆம்புலன்சில் எடுத்துக்கொண்டு நானும், என் மகனும் ஓரிரு டாக்டர்கள், ஆஸ்பத்திரி ஊழியர்களோடு போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம் செய்ய கொண்டுச்சென்றோம். கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் எங்கள் முறைப்படி அடக்கம் செய்ய நினைத்தோம். ஆனால் அங்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்படியே எங்களை வேலங்காடு சுடுகாட்டுக்கு கூட்டிச்சென்றார்கள். அங்கு அவரை அடக்கம் செய்யப்போகும் நேரத்தில் வெளியே இருந்து கற்களையும், கம்புகளையும் தூக்கி வீசியதால் எங்கள் எல்லோருக்கும் ரத்த காயம் ஏற்பட்டு, அப்படியே அவருடைய உடலை தூக்கிக்கொண்டு மீண்டும் கீழ்ப்பாக்கம் நோக்கி சென்றோம்.

எங்கள் ஆஸ்பத்திரி ஆம்புலன்சில் கீழ்ப்பாக்கம் செல்லும் வழியில், ஆம்புலன்சு டிரைவர்கள் 2 பேரும் ரத்தம் சொட்ட, சொட்ட இருக்கும் நேரத்தில் ஈகா தியேட்டர் அருகே வண்டியை நிறுத்திவிட்டு, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுவிட்டார்கள். அந்த நேரத்தில் என்னுடைய கணவரோடு பணியாற்றும் டாக்டர் பிரதீப் என்னுடைய கணவர் உடலை ஏற்றி வந்த ஆம்புலன்சு அம்போ என்று இருப்பதை கண்டு துடிதுடித்துவிட்டார். அங்கே இருந்த போலீஸ்காரரின் சீருடையை வாங்கி மாட்டிக்கொண்டு, அவரே ஆம்புலன்ஸ் ஓட்டிச்சென்றார்.

வேலங்காடு மயானத்தில் அவரும், மேலும் 2 டாக்டர்கள், போலீஸ்காரர்கள், மாநகராட்சி ஊழியர்கள் சேர்ந்து வெளியே இருந்து வந்த எதிர்ப்பை மீறி அவசர, அவசரமாக அடக்கம் செய்துவிட்டனர். என்னுடைய கணவர் அடக்கம் செய்யப்பட்டதை நானோ, என் மகனோ எங்கள் கண்களால் பார்க்கவில்லை என்பதை எங்களால் இன்னும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. நான் தமிழக அரசு, முதல்-அமைச்சருக்கு விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால் என் கணவரின் உடல் உரிய மரியாதையோடு எங்கள் முறைப்படி அடக்கம் செய்யப்படவேண்டும்.

வேலங்காடு மயானம் ஒரு சுடுகாடு. அங்கு எந்த கல்லறையும் கிடையாது. அங்கு புதைப்பதற்கு பதிலாக உடலை எடுத்து கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம் செய்தால் தான் அவர் ஆன்மா சாந்தியடையும். எங்கள் மனமும் ஆறுதல் அடையும். அதைவிடுத்து அவருடைய உடலை ஒரு அனாதைபோல வேலங்காடு மயானத்தில் புதைத்திருப்பது எங்களை பெரிதும் வேதனைப்படுத்துகிறது. முதல்-அமைச்சர் தான் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். எங்கள் ஆஸ்பத்திரியில், அரசு விடுத்த வழிமுறைகள் அனைத்தையும் சற்றும் பிசகாமல் நடைமுறைப்படுத்தியவர் என் கணவர். அவருக்கு இந்த கதி நேர்ந்துவிட்டதே என்பதை நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது.

என்னுடைய கணவர் உடல் உரிய பாதுகாப்பு முறைகளை பின்பற்றி, முதலாவதாக கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டு, அதன் வெளியே மரப்பெட்டி வைத்து அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. உடல் வைக்கப்பட்டுள்ள இந்த கண்ணாடி மற்றும் மரப்பேழையை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு மாற்றி அடக்கம் செய்தால், அதில் எந்த தொற்றும் ஒருபோதும் ஏற்படாது என்று டாக்டர்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறார்கள். ஆகையால் இதனால் எந்தவித தொற்றும் ஏற்படாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும். தமிழகத்துக்காகவே தன்னிகரில்லாமல் உழைத்த டாக்டரை அங்கீகரிக்கும் வகையில் முதல்-அமைச்சர் இதனை செய்து கொடுத்தால் என்னுடைய கணவரின் ஆன்மாவும் சாந்தியடையும், எங்கள் குடும்பமும் காலம் காலமாக அவரை போற்றிக்கொள்ளும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page