சென்னையில் நேற்று ஒரே நாளில் 55 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,596 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
சென்னை,
கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. தலைநகரமான சென்னையில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 76 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,596 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் நேற்று ஒரே நாளில் 176 பேர் தமிழக அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகபடியாக கரூர் அரசு மருத்துவமனையில் 48 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் இதுவரை 1,596 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 76 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதில் சென்னையில் நேற்று 55 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 176 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 635 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். தமிழக மருத்துவமனைகளில் 940 பேர் கொரோனா நோய் தொற்று சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தமிழகத்தில் நேற்று ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன் மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று ஒரே நாளில் பாதிக்கப்பட்ட 55 பேரில் தனியார் செய்தி தொலைக்காட்சி நிறுவன ஊழியர்கள் 26 பேர் உள்ளனர். அந்த தொலைக்காட்சி நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் நேற்று முன்தினம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டார்.
இதையடுத்து அவருடன் பணி புரிந்த அனைவரிடமும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதில் அவர்களில் 26 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் அனைவரும் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.