உள்துறை மந்திரி அமித்ஷாவின் வேண்டுகோளை ஏற்று, டாக்டர்கள் தங்கள் போராட்ட அறிவிப்பை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.
புதுடெல்லி,
நாடு முழுவதும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை குணப்படுத்தும் பணியில் டாக்டர்கள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது டாக்டர்கள் மற்றும் நர்சுகள் சிலருக்கும் நோய்த்தொற்று ஏற்பட்டு இருக்கிறது.
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்த 2 டாக்டர்களை தங்கள் பகுதிகளில் புதைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இதேபோன்ற சம்பவம் மேகாலயா மாநிலம் ஷில்லாங்கிலும் நடந்து உள்ளது. சில இடங்களில் டாக்டர்கள் தாக்கப்பட்டது, வாடகை வீட்டில் குடியிருக்கும் டாக்டர்கள் வீட்டுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது போன்ற சம்பவங்களும் நடந்து உள்ளன.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், டாக்டர்களுக்கும், பிற மருத்துவ பணியாளர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க கோரியும் நாடு முழுவதும் டாக்டர்கள் நேற்று மெழுகுவர்த்தி ஏற்றியும், இன்று (வியாழக்கிழமை), கையில் கருப்பு பட்டை அணிந்தும் போராட்டத்தில் ஈடுபட இருந்தனர். இதற்கான அழைப்பை இந்திய மருத்துவ சங்கம் விடுத்து இருந்தது.
இதைத்தொடர்ந்து, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, சுகாதார துறை மந்திரி ஹர்ஷ வர்தன் ஆகியோர் டாக்டர்கள் மற்றும் இந்திய மருத்துவ சங்க பிரதிநிதிகளுடன் நேற்று காணொலி காட்சி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் சேவையை பாராட்டிய அமித்ஷா, அவர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும், எனவே எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் எந்த விதமான அடையாள போராட்டத்திலும் ஈடுபடவேண்டாம் என்றும் டாக்டர்களை அமித்ஷா கேட்டுக் கொண்டார். பணியாற்றும் இடங்களில் டாக்டர்களின் பாதுகாப்பை மோடி அரசு உறுதி செய்யும் என்றும் கூறினார்.
இந்த பேச்சுவார்த்தை விவரம் பற்றிய தகவல்களை பின்னர் அமித்ஷா தனது டுவிட்டர் பதிவில் வெளியிட்டு இருந்தார். அதில், கொரோனா வைரசை ஒழிக்க பாடுபடும் டாக்டர்களின் பாதுகாப்பும், கண்ணியமும் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், இதற்கு இந்தியர்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கூறி இருந்தார்.
அமித்ஷாவின் இந்த வேண்டுகோளை ஏற்று, டாக்டர்கள் போராட்டத்தை இந்திய மருத்துவ சங்கம் வாபஸ் பெற்றுக் கொண்டது.
இது தொடர்பாக அந்த சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதில், தங்களுடைய கோரிக்கையை ஏற்று டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்த மத்திய அரசு சட்டம் கொண்டு வரும் என்று உள்துறை மந்திரி உறுதி அளித்து இருப்பதாகவும், இதைத்தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்படுவதாகவும் கூறப்பட்டு உள்ளது.