பிரதமர் மோடி, மாநில முதல்-மந்திரிகளுடன் 27-ந்தேதி காணொலி காட்சி வழியாக ஆலோசனை நடத்துகிறார். இதனால் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
புதுடெல்லி,
கொரோனா வைரஸ், உலக நாடுகளையெல்லாம் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் தனது ஆதிக்கத்தை இந்த கொலைகார வைரஸ் தொடர்ந்து பரப்பிக்கொண்டுதான் இருக்கிறது.
இந்த வைரஸ் தொடர்பாக நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி கடந்த மாதம் 24-ந்தேதி டி.வி.யில் தோன்றிப்பேசினார். அப்போது அவர் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கிற இந்த வைரசை தடுப்பதற்காக 21 நாள் ஊரடங்கை அமல்படுத்துவதாக அறிவித்தார்.
இந்த ஊரடங்கின்போது பொதுமக்கள் அனைவரும் வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருப்பதின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். வீட்டை விட்டு ஒரு அடி வெளியே எடுத்து வைத்தால்கூட, கொரோனா வைரஸ் வீட்டுக்குள் நுழைந்து விடும் என்று அவர் எச்சரித்தார்.
இந்த 21 நாள் ஊரடங்கு கடந்த மாதம் 25-ந்தேதி அமலுக்கு வந்தது. சென்ற 14-ந்தேதி முடிவு அடைய இருந்தது. ஆனால், 11-ந்தேதி பிரதமர் மோடி, முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி வழியாக கலந்துரையாடினார். ஒவ்வொரு மாநிலத்தின் நிலவரத்தையும் கேட்டறிந்தார். அப்போது பெரும்பாலான மாநிலங்களின் முதல்-மந்திரிகள் ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
அதைத்தொடர்ந்து இந்த ஊரடங்கை மே மாதம் 3-ந்தேதிவரை மேலும் 19 நாட்கள் நீட்டிப்பதாக பிரதமர் மோடி, டி.வி.யில் தோன்றி அறிவித்தார்.
ஆனாலும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் இன்னும் குறிப்பிடத்தக்க அளவில் கட்டுப்படுத்தப்படவில்லை. புதிது, புதிதாக பலரை பாதித்துக்கொண்டுதான் இருக்கிறது. பலியும் அதிகரித்துக்கொண்டே போகிறது.
கொரோனா வைரஸ் தாக்கியவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 400-ஐ கடந்து சென்று கொண்டிருக் கிறது. பலியானவர்களின் எண்ணிக்கையும் 650-ஐ கடந்து விட்டது. ஏறத்தாழ 4 ஆயிரம் பேர் மட்டுமே குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர்.
அதே நேரத்தில் நாடு முழுவதும் பரவலாக பல இடங்களில் அறிகுறியே இன்றி கொரோனா வைரஸ் பலரையும் தாக்கி வருகிறது.
சமூக பரவல் என்ற மூன்றாவது கட்டத்துக்கு கொரோனா வைரஸ் சென்று விடக்கூடாது என்பதில் மத்திய அரசு கண்ணும், கருத்துமாக உள்ளது.
இந்த நிலையில், பிரதமர் மோடி வருகிற 27-ந்தேதி காலை மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி வழியாக முக்கிய ஆலோசனை நடத்துகிறார். அப்போது ஊரடங்கை நீட்டிக்க வேண்டுமா என்பது தொடர்பாக முதல்-மந்திரிகளின் கருத்துகளை அவர் கேட்டு அறிவார்.
கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து பிரதமர் மோடி, முதன்முதலாக கடந்த மாதம் 20-ந்தேதி முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி வழியாக விவாதித்தார். சென்ற 11-ந்தேதி இரண்டாவது முறையாக அவர் முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி வழியாக கலந்துரையாடி, மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். எனவே 27-ந்தேதி அவர் முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை நடத்த இருப்பது 3-வது முறை ஆகும்.