தமிழகத்தில் கொரோனா வைரசால் 1,629 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33-ஆக குறைந்துள்ளது.
சென்னை,
உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்கம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்தநிலையில் இந்தியாவிலும் கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்திய அளவில் மராட்டிய மாநிலம் முதல் இடத்திலும், குஜராத் 2-வது இடத்திலும், தலைநகரம் டெல்லி 3-வது இடத்திலும் இருந்து வருகிறது. இதைத்தொடர்ந்து ராஜஸ்தான் 4-வது இடத்திலும், தமிழகம் கொரோனா பாதிப்பில் 5-வது இடத்தில் இருந்து வருகிறது.
இந்தநிலையில் தமிழகத்தில் நேற்று கொரோனா வைரசால் 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,629 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 4 தனியார் செய்தி தொலைக்காட்சி ஊழியர்கள் உட்பட நேற்று மட்டும் 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று குணமடைந்த 27 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் இதுவரை 59 ஆயிரத்து 23 தொண்டை சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று ஒரே நாளில் மட்டும் 5 ஆயிரத்து 878 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் இதுவரை 1,629 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 33 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் 49 ஆயிரத்து 506 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது. 1,937 பேரின் பரிசோதனை முடிவுகள் வரவில்லை.
தமிழகத்தில் நேற்று ஒரே நாள் பாதித்த 33 பேரில், சென்னையில் 16 வயது சிறுமி உட்பட 4 பெண்கள் மற்றும் 11 ஆண்கள் என 15 பேரும், தஞ்சாவூரில் 3 பெண்கள் உட்பட 5 பேரும், மதுரையில் 4 ஆண்களும், திருவள்ளூரில் ஒரு பெண் உட்பட 2 பேரும், அரியலூரில் 2 ஆண்களும், திருவண்ணாமலை, திருச்சி, விழுப்புரம், திண்டுக்கல், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டத்தில் தலா ஒருவரும் நேற்று கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக மருத்துவமனைகளில் நேற்று ஒரே நாளில் 27 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று 662 பேர் குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.