டாக்டர் சைமனின் மனைவிக்கு, எடப்பாடி பழனிசாமி ஆறுதல் – ‘மகன், மகள் எதிர்காலத்துக்காக தைரியமாக இருக்கவேண்டும்’

Spread the love

சென்னை,

நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தை சேர்ந்த பிரபல நரம்பியல் நிபுணரான டாக்டர் சைமன் ஹெர்குலஸ், கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு, ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

இதையடுத்து டாக்டர் சைமன் ஹெர்குலசின் உடலை, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்வதற்கு அவருடைய உறவினர்கள் எடுத்துச்சென்றனர். ஆனால் அங்கு சமூக விரோதிகள் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவருடைய உடலை எடுத்துச்சென்றவர்கள் மீது கல், கம்புகளை வீசி கொடூரமான முறையில் தாக்குதலில் ஈடுபட்டனர். இதையடுத்து வேலங்காடு மின் மயானத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது.

டாக்டர் சைமன் ஹெர்குலசின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தது, நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து கலகத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசாரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் டாக்டர் சைமன் ஹெர்குலசின் மனைவி ஆனந்தி, என்னுடைய கணவர் உடலை அனாதைப்போல வேலங்காடு மின் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுவிட்டது. கணவர் உடலை அவருடைய ஆசைப்படி கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யவேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கண்ணீர் மல்க உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். இதுதொடர்பான செய்திபத்திரிகைகளில்  நேற்று வெளியாகியது.

அதன் எதிரொலியாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டாக்டர் சைமன் ஹெர்குலசின் மனைவி ஆனந்தியை நேற்று பிற்பகல் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் கூறினார். இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பதிவில், “இன்று (நேற்று) சுமார் 12.30 மணியளவில், கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த டாக்டர் சைமனின் துணைவியார் ஆனந்தி சைமனை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினேன். அவர்களுடைய மகன் மற்றும் மகள் ஆகியோரின் எதிர்கால நலன் கருதி தைரியமாக இருக்கும்படி கேட்டுக்கொண்டேன்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page