உலகமெங்கும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்கியோர் எண்ணிக்கை 26 லட்சத்தை தாண்டி விட்டது. இதில் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
நியூயார்க்,
சீனாவின் உகான் நகரத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 1-ந்தேதி முதன்முதலாக தோன்றிய கொரோனா வைரஸ், இப்போது விஸ்வரூபம் எடுத்து விட்டது.
ஏறத்தாழ உலகின் 185 நாடுகளுக்கு இந்த வைரஸ் தொற்று நோய் பரவி விட்டது.
இந்த வைரஸ் தொற்றுநோய்க்கு இன்னும் மருந்தோ, தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படாத நிலையில், உலக நாடுகள் அனைத்தும் அதன்முன் மண்டியிடுகிற நிலைதான் ஏற்பட்டுள்ளது. இந்த தொற்றுநோய்க்கு எதிராக உலக நாடுகள் பலவும் ஒன்றிணைந்து போர் தொடுத்துள்ளன. ஆனால் இன்னும் வெற்றி கிடைக்கவில்லை. தற்போது வரை கொரோனா வைரசின் கைதான் ஓங்கி நிற்கிறது.
26 லட்சத்தை தாண்டியது
நேற்று மதிய நிலவரப்படி, இந்த கொரோனா வைரஸ் தொற்று நோய் 26 லட்சத்து 37 ஆயிரத்து 300-க்கும் அதிகமானோரை தாக்கி உள்ளது. பல நாடுகள் இன்னும் கூடுதலான அறிகுறிகளுடன் இருப்பவர்களுக்குத்தான் பரிசோதனை நடத்துகின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் மட்டும்தான் இதுவரை அதிகபட்சமாக 44 லட்சத்து 82 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. வேறு எந்த நாட்டிலும் இந்த எண்ணை எட்டிப்பிடிக்கிற நிலை இல்லை.
பாதிப்பில் அமெரிக்கா முதல் இடம்
கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களை அதிகளவில் கொண்டு, முதல் இடத்தில் இருப்பது வல்லரசு நாடான அமெரிக்காதான். அங்கு 8 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோரை இந்த தொற்றுநோய் தாக்கி உள்ளது.
அதற்கு அடுத்த நிலையில் ஐரோப்பிய நாடுகள்தான் அணிவகுத்து நிற்கின்றன.
அந்த வரிசையில் ஸ்பெயின் நாட்டில் 2 லட்சத்து 9 ஆயிரம் பேரும், இத்தாலியில் 1 லட்சத்து 87 ஆயிரத்து 500 பேரும், பிரான்சில் 1 லட்சத்து 57 ஆயிரத்து 200 பேரும், ஜெர்மனியில் 1 லட்சத்து 50 ஆயிரத்து 650 பேரும், இங்கிலாந்து நாட்டில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 700 பேரும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்குதலால் அவதியுற்று வருகின்றனர்.
பலியிலும் அமெரிக்கா முதல் இடம்
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உலகமெங்கும் சுமார் 1 லட்சத்து 84 ஆயிரம் பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த உயிர்ப்பலியிலும் அமெரிக்காதான் முதல் இடம். அங்கு 47 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் பலியாகி உள்ளனர். தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கு பலியாகி வருகிறார்கள். நியூயார்க் மாகாணத்தில் மட்டுமே 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள். அமெரிக்காவில் நேற்று முன்தினம் 24 மணி நேரத்தில் 2,139 பேர் பலியானதாக பதிவாகி உள்ளது. அதற்கு முந்தைய நாளுடன் ஒப்பிடுகையில் இது 600 குறைவு என தகவல்கள் சொல்கின்றன.
இத்தாலியில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், ஸ்பெயினில் 21 ஆயிரத்து 700-க்கும் அதிகமானோரும், பிரான்சில் 21 ஆயிரத்து 300-க்கும் அதிகமானோரும், இங்கிலாந்தில் 18 ஆயிரத்து 100-க்கும் மேலானோரும் இறந்துள்ளனர்.
குணம் அடைந்து வீடு திரும்பியவர்கள்
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு என்று எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படாத நிலையிலும், அதன் அறிகுறிகளை சரிசெய்யவும், நோய் எதிர்ப்புச்சக்தியைப் பெருக்கவும் அளிக்கிற மருத்துவம், அந்த வைரஸ் தொற்றினை கொல்கிறது.
அந்த வகையில் உலகமெங்கும் 7 லட்சத்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
ஜெர்மனியில் அதிகபட்சமாக 1 லட்சத்து 3 ஆயிரத்து 300 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
அமெரிக்காவில் 76 ஆயிரத்து 600-க்கும் அதிகமானோரும், ஸ்பெயினில் 85 ஆயிரத்து 900-க்கும் அதிகமான பேரும், சீனாவில் 77 ஆயிரத்து 900-க்கும் கூடுதலானோரும், ஈரானில் 63 ஆயிரத்து 100-க்கும் மேற்பட்டோரும், இத்தாலியில் 54 ஆயிரத்து 500-க்கும் அதிகமானோரும், பிரான்சில் 41 ஆயிரத்து 300-க்கும் அதிகமானோரும் சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பி இருக்கிறார்கள்.