பொதுமக்களுக்கு ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துள்ள பிரதமர் மோடி, கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவோம் என்றும் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுக்குள் கொண்டு வர வருகிற மே மாதம் 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித ரமலான் மாதத்தின் ஒருமாத காலம் நோன்பு, பிறை தெரிந்ததால் இன்று முதல் இந்தியாவில் தொடங்கப்பட உள்ளது.
தற்போது கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் ரமலான் மாதத்தில் கடைப்பிடிக்கப்படும் வழக்கங்களுக்கு பதிலாக வீடுகளிலேயே தொழுகை நடத்த வேண்டும் என்றும், நோன்பு முடிக்க மாலையில் ஒன்று கூடுவதையும், இப்தார் நிகழ்ச்சிகளையும் தவிர்க்க வேண்டும் என்றும் இஸ்லாமிய தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டரில், “ரம்ஜான் வாழ்த்துகள்! ஒவ்வொருவரும் பாதுகாப்புடனும், வளமுடனும் இருப்பதறகாக நான் பிராத்திக்கிறேன். இந்த புனிதமான மாதம் நமக்கு கருணை, மனிதநேயம், இரக்கத்தை கொண்டு வரட்டும். கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றிபெறுவோம். ஆரோக்கியமான பூமியை உருவாக்குவோம்” என்று பதிவிட்டுள்ளார்.