இந்தியாவில் மழைக்காலத்தில் கொரோனா வைரஸ் மீண்டும் தாக்கும் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Spread the love

கொரோனா வைரஸ் தொற்றுநோய், இந்தியாவில் மழைக்காலத்தில் மீண்டும் தாக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

புதுடெல்லி,

கொலைகார கொரோனா வைரசை ஒழித்துக்கட்டுவதற்கான வழிமுறைகள் குறித்து உலகமெங்கும் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

இந்த கொலைகார வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்காமல், ஊரடங்குக்கு மத்தியி1ம் அடங்காமல் பரவி வருகிறது. தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வைரசின் பிடியில் சிக்கித் தவித்து வருகிறார்கள். கொரோனா வைரசின் முதல் தாக்குதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில் அடுத்த தாக்குதல் பற்றியும் விஞ்ஞானிகள் எச்சரிக்க தொடங்கி விட்டார்கள். கொரோனா வைரசின் இரண்டாவது அலைகள், ஜூலை மாத கடைசியில் அல்லது ஆகஸ்டு மாதம் மழைக்காலத்தில் வந்து தாக்கும் என்று அவர்கள் எச்சரிக்கை விடுக்கிறார்கள்.

இதையொட்டி உத்தரபிரதேச மாநிலம், தாத்ரி நகரத்தில் உள்ள ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தின் கணிதவியல்துறை பேராசிரியர் சமித் பட்டாச்சாரியா கூறியதாவது:-

தினமும் புதிது புதிதாக பலரையும் கொரோனா வைரஸ் தாக்கி வந்து, ஒரு உச்சத்தை எட்டியுள்ளது. இது இனி சரிவடையும். ஆனாலும் அடுத்த சில வாரங்களில் அல்லது மாதங்களில் கூட அது மீண்டும் வந்து தாக்கும்.

இரண்டாவது அலை என்பது ஜூலை மாதத்தின் இறுதியில் அல்லது ஆகஸ்டு மாதத்தில் மழைக்காலத்தில் திரும்பி வரலாம். அதன் தாக்குதல் என்பது நாம் எந்தளவுக்கு சமூக இடைவெளியை பின்பற்றுகிறோமோ, அதைப்பொறுத்துத்தான் அமையும்.

கடந்த சில நாட்களில் புதிய நிகழ்வுகளைப் பார்க்கிறபோது, இதற்கு முன்பு இருந்ததை விட இப்போது புதிதாக கொரோனா வைரஸ் தொற்று பரவுவது சற்றே மெதுவாகத்தான் நடக்கிறது. இது நாம் உச்சத்தைத் தொட்டு வந்து விட்டோம் என்பதை காட்டுவதாக இருக்கலாம்.

சீனாவிலும், ஐரோப்பாவிலும் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகள், ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களை மீண்டும் தாக்கக்கூடும் என்று காட்டுகின்றன. எனவே முந்தைய நோய்த்தொற்றானது, இரண்டாவது நோய்த்தொற்றுக்கு எதிராக எதிர்ப்புச்சக்தியைப் பெற உதவும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. (அதாவது ஒரு முறை கொரோனா வைரஸ் தொற்று நோய் தாக்கியவர்களுக்கு மீண்டும் தாக்காது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.)

எனவே ஒட்டுமொத்த மக்களும் இரண்டாவது அலைக்கு ஓரளவு பாதிக்கக்கூடும்.

சந்தையில் தடுப்பூசி வருகிறவரையில், நாம் விழிப்புணர்வுடன் இருந்தாக வேண்டும். நாட்டில் அங்கும் இங்குமாய் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்குகிறபோது, அந்த பகுதியை, உள்ளூர் அளவில் நாம் தனிமைப்படுத்த வேண்டும் அல்லது சமூக இடைவெளியை பின்பற்ற செய்ய வேண்டும். மேலும், அடையாளம் காண சோதனைகளை செய்ய வேண்டும். அறிகுறிகளை பார்க்காமல் சோதனைகளை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்தக் கருத்தை பெங்களூருவில் உள்ள ஐ.ஐ.எஸ்.சி. என்னும் இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் ராஜேஷ் சுந்தரேசனும் உறுதி செய்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறியதாவது:-

நாம் இயல்பான வாழ்க்கை முறைக்கு திரும்புகிறபோது, கொரோனா வைரஸ் தொற்று நோய்தாக்குதல் மீண்டும் வர வாய்ப்பு இருக்கிறது. பயணக்கட்டுப்பாடுகளை ஓரளவுக்கு தளர்த்தியபின்னர் சீனா இதைப் பார்த்துக்கொண்டிருக்கிறது.

தற்போது நாம் ஊரடங்கு காலகட்டத்தில் இருக்கிறோம். இது நமக்கு உரிய கால அவகாசத்தை தந்துள்ளது. இந்த நேரத்தில் நாம் சோதனைகளை செய்ய வேண்டும். பாதிப்புக்குள்ளானவர்களை கண்டுபிடிக்க வேண்டும். தனிமைப்படுத்த வேண்டும். சிறப்பான சுகாதாரத்தை பின்பற்ற வேண்டும். தடுப்பூசியை கண்டுபிடிக்க வேண்டும். நாம் எப்படியும் இவற்றை செய்தாக வேண்டும். இவை செய்யப்படுகின்றன.

எப்போது, எப்படி ஊரடங்கை விலக்கிக்கொள்ளப்போகிறோம் என்பது கடினமான முடிவாக அமையும். இது பல கட்டங்களாக அமையப்போகிறது என்பது தெளிவாக தெரிகிறது. பொது சுகாதாரத்தை மதிப்பிடுவதற்கு முடிவு எடுப்பவர்களுக்கு உதவுகிற கருவிகளை கொண்டு வருவதில், எங்கள் குழு கவனம் செலுத்துகிறது. மழைக்காலத்தில், நமது நாட்டில் பல இடங்களில் காய்ச்சல் பரவும். எனவே காய்ச்சல் அறிகுறிகளை நாம் கண்டுகொள்ளாமல் விட்டு விடக்கூடாது.

அறிகுறிகளைப் பற்றி கவலைப்படாமல், தீவிரமாக பரவிய இடங்களில் (ஹாட் ஸ்பாட்களில்) நாம் சோதனைகளை அதிகரிக்க வேண்டும். பாதிப்புக்குள்ளானோரை அடையாளம் காண வேண்டும். அப்போதுதான் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவுவதை கட்டுப்படுத்த முடியும். இப்போது குறிப்பிடத்தக்க வகையில் கொரோனா வைரஸ் பரவலை கண்டுபிடிக்க சோதனைகள் நடந்து கொண்டிருக்கலாம். மக்கள் தங்கள் சுகாதாரம் குறித்து, மிகவும் கவனமாக இருப்பதால் நடத்தை மாற்றங்கள் இருக்கலாம். முக கவசங்கள் அணிவது பொதுவானதாகி விடலாம். இதெல்லாம் இரண்டாவது அலை தாக்குகிறபோது அதை கட்டுப்படுத்த உதவலாம். இவ்வாறு அவர் கூறினார்.

பேராசிரியர் ராஜேஷ் சுந்தரேசனை ஒருவராக கொண்டுள்ள, பெங்களூரு இந்திய அறிவியல் கல்வி நிறுவனமும், மும்பை டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து, மும்பை மற்றும் பெங்களூருவை முன்மாதிரியாக கொண்டு நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், ‘கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை ஏற்பட வாய்ப்பு உள்ளது; கொரோனா வைரஸ் தொற்றுநோயை தீவிரமாக கண்டுபிடிப்பதற்கும், உள்ளூர் மயமாக்குவதற்கும், பாதித்தவர்களை தனிமைப்படுத்துவதற்கும், புதிய தொற்றுகளை தடுப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்காதபட்சத்தில் பொது சுகாதார அச்சுறுத்தல் தொடரும் என்பது தெளிவாகி உள்ளது.

கட்டுப்பாடுகளை தளர்த்தும் நேரத்தில், ஒவ்வொரு நகரத்திலும், கொரோனா வைரஸ் பரவல் அளவைப் பொறுத்து, பொது சுகாதார தேவைகள் ஏற்படும் என்பதுவும் விஞ்ஞானிகளின் கருத்தாக அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page