இந்தியாவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 1,752 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்துவிட்டது.
புதுடெல்லி,
உலக நாடுகள் அனைத்தையும் பதம்பார்த்து வரும் கொரோனா, இந்தியாவிலும் பரவும் வேகத்தை கூட்டி வருகிறது. அதன்படி வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்துவிட்டது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று மாலை வெளியிட்ட புள்ளி விவரத்தில், இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 1,752 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு கடந்த 20-ந் தேதி 1,540 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதே ஒரே நாளில் ஏற்பட்ட அதிகபட்ச பாதிப்பாக இருந்தது.
புதிதாக 1,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 21,700-ல் இருந்து 23,452 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பிடியில் சிக்கி 723 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 17,915 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 4,814 பேர் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
ஒரே நாளில் மட்டும் 37 பேர் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தில் 14 பேரும், குஜராத்தில் 9 பேரும் பலியாகி உள்ளனர். உத்தரபிரதேசத்தில் புதிதாக 3 பேரின் உயிரை காவு வாங்கிய இந்த கொரோனா, தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, மத்தியபிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தலா 2 பேரின் உயிரையும் பறித்துள்ளது. கர்நாடகாவில் ஒருவரை உயிரிழக்கச் செய்துள்ளது.
மராட்டியத்தில் கொரோனா 280-க்கும் அதிகமானோரின் உயிரை பறித்துள்ளதுடன், 6,400-க்கும் மேற்பட்டவர்களை பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. குஜராத்தில் 2,600 பேரை தனது வலையில் சிக்க வைத்ததுடன், 112 பேரின் உயிரையும் காவு வாங்கி உள்ளது. டெல்லியில் 2,300-க்கும் அதிகமானோரும், ராஜஸ்தானில் 2,000-க்கும் மேற்பட்டவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் புதிதாக 72 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,755 ஆக உயர்ந்துள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இந்த எண்ணிக்கை 950-ஐ கடந்துவிட்டது. கர்நாடகாவில் 470-க்கும் அதிகமானவர்களை கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. கேரளாவில் 450 பேரின் உடலில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி உள்ள கொரோனா, 4 மாத பச்சிளம் குழந்தையின் உயிரையும் பறித்துவிட்டது.