தனித்து, தன்னம்பிக்கையுடன் இருந்து சவால்களை சந்திக்க வேண்டும் என்ற பாடத்தை கொரோனா கற்றுத்தந்து இருப்பதாக பிரதமர் மோடி கூறினார்.
புதுடெல்லி,
பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி, பஞ்சாயத்து தலைவர்களுடன் பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் பேசினார். இந்த நிகழ்ச்சியின் போது கிராம சுவராஜ் இணையதளத்தையும், சுவமித்வா யோஜனா என்ற திட்டத்தையும் அவர் தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சியின் போது மோடி பேசுகையில் கூறியதாவது:-
பெருந்தொற்று நோயான கொரோனா நமக்கு பல சவால்களை ஏற்படுத்தி உள்ளது. சவால்கள் ஏற்படும் போது தன்னம்பிக்கையுடன் தனித்து இருந்து அவற்றை சந்தித்து வெற்றி கொள்ள வேண்டும் என்பதை கொரோனா நமக்கு கற்றுத்தந்து இருக்கிறது. நாம் எப்படி செயல்பட வேண்டும் என்பதையும் நம்மை காத்துக்கொள்ளும் பொறுப்பு நம்மிடம்தான் உள்ளது என்பதையும் உணர்த்தி இருக்கிறது. நமது தினசரி வாழ்க்கைக்கு நாம் மற்றவர்களை சார்ந்து இருக்கக்கூடாது என்ற பாடத்தை போதித்து இருக்கிறது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை, நகரங்களை விட கிராமங்கள் நன்றாக சமாளிக்கின்றன. கிராமப்புறங்களில் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி, மிகவும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்கிறார்கள். அவர்களிடம் இருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்.
சில தடங்கல்கள், இடையூறுகள் இருந்த போதிலும் கொரோனாவை எதிர்த்து போராடி நம்மால் வெற்றி பெற முடியும் என்ற உறுதியை நாம் உலகுக்கு காட்டி இருக்கிறோம்.
வளர்ச்சி அடைந்த, தன்னிறைவு பெற்ற கிராமங்கள் நாட்டின் முன்னேற்றத்தில் முக்கிய பங்காற்றுகின்றன. நாட்டில் செல்போன் உற்பத்திக்கு அனுமதி வழங்க தொடங்கியதன் மூலம், கிராமங்களுக்கு அதிகாரங்கள் கிடைத்து இருப்பதோடு அங்குள்ள மக்களை டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு கொண்டு வந்திருக்கிறது.
கிராம பஞ்சாயத்துகளை மின்னணு மயமாக்கும் நோக்கத்தில் கிராம சுவராஜ் இணையதள சேவை தொடங்கப்பட்டு உள்ளது. கிராம பஞ்சாயத்துகளுக்கு ஒதுக்கப்படும் நிதி, அங்கு மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்ட பணிகள் பற்றிய விவரங்களை இந்த இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ள முடியும். வளர்ச்சி திட்டப்பணிகளில் ஒளிவுமறைவற்ற தன்மை உருவாவதை இந்த இணையதள சேவை உறுதி செய்யும்.
சுவமித்வா யோஜனா திட்டம், கிராமங்களில் உள்ள நிலங்களை ஆளில்லா கேமரா மூலம் படம் பிடித்து வகைப்படுத்தி மின்னணு மயமாக்க உதவும்.
6 ஆண்டுகளுக்கு முன்பு 100 பஞ்சாயத்துகள் மட்டுமே அகன்ற அலைவரிசை இணைப்பு பெற்று இருந்தன. இப்போது 1 லட்சத்து 25 ஆயிரம் கிராமங்களில் அந்த வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.