ஊரடங்கை தளர்த்துவது குறித்து, சில நாடுகள், புதிய அணுகுமுறைகளை நடைமுறைபடுத்த துவங்கி உள்ள நிலையில், சில நாடுகள் எடுக்கும் அவசர முடிவுகள், ஆபத்தில் முடியலாம் என வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
‘கொரோனா’ வைரஸ் தொற்று உலகம் முழுதும், 28.26 லட்சம் பேரை பாதித்துள்ளது. 1.96 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். 7.98 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். ஐரோப்பிய நாடான ஸ்பெயினில், இன்றைய நிலவரப்படி, அதிகபட்ச உயிரிழப்பும், நோய் தொற்றும் நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு, 367 பேர் நேற்று பலியாகினர். புதிதாக, 6,740 பேருக்கு, நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஸ்பெயினில், கடந்த நான்கு வாரத்தில், ஒரே நாளில் நிகழ்ந்த உயிரிழப்புகளில், இந்த எண்ணிக்கை மிகவும் குறைவானது.
மேற்காசிய நாடான ஈரானில், நேற்றைய பலி எண்ணிக்கை, 93 ஆகவும், புதிய பாதிப்பு, 1,168 ஆகவும் உள்ளது. இங்கு மொத்த பலி எண்ணிக்கை, 5,574 ஆக உள்ளது. இதுவரை, 66 ஆயிரத்து, 596 பேர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து, ஈரானில் பிறப்பிக்கப்பட்டு இருந்த ‘ரெட் அலெர்ட்’ விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனாலும், தடை உத்தரவுகளில் தளர்வுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
அமெரிக்காவை பொறுத்தவரை, 9.23 லட்சம் பேருக்கு தற்போது வரை தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 37,170 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 1,858 பேர் பலியாகி உள்ளனர். ரஷ்யாவில், நேற்றைய பலி எண்ணிக்கை, 60 ஆகவும், புதிய பாதிப்பு, 5,849 ஆகவும் உள்ளது.
உலகில் உள்ள பல்வேறு நாடுகளும், முழு ஊரடங்கு அறிவித்து மாதக்கணக்காகிறது. இதையடுத்து, கடும் பொருளாதார நெருக்கடியில், அனைத்து நாடுகளும் சிக்கி தவிக்கின்றன. இதனால், ஊரடங்கை தளர்த்த வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், மக்களின் நலனும் முக்கியம் என்பதால், ஊரடங்கு தளர்வில், வெவ்வேறு விதமான வழிமுறைகளை, சில நாடுகள் பின்பற்ற துவங்கி உள்ளன.
ஐரோப்பிய நாடான சுவீடனில், கால்பந்து பயிற்சிக்காக, மைதானத்திற்கு செல்ல குழந்தைகள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், ஸ்பெயினிலோ, வீட்டு வாசலுக்கு வருவதற்கு கூட, குழந்தைகள் அனுமதிக்கப்படுவது இல்லை. அமெரிக்காவின் மருத்துவமனைகள், கொரோனா பாதிப்பால் திணறி வந்தாலும், ஜார்ஜியாவில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள், முடி திருத்த நிலையங்கள், ‘பவுலிங்’ விளையாட்டு மையங்கள் நேற்று முதல் திறக்கப்பட்டன. அதே நேரம், உலகின் பல நாடுகளில், முடி திருத்த நிலையங்கள் செயல்பட இன்னும் பல மாதங்கள் ஆகும் என, கூறப்படுகிறது.
ஐரோப்பிய நாடான பிரான்சில், அடுத்த மாதம், 11 வரை ஊரடங்கு உள்ளது. அதன் பின், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது, பெற்றோரின் விருப்பம் என, அரசு அறிவித்துள்ளது.
ஊரடங்கை தளர்த்துவது என்பது, அந்தந்த நாடுகளின் தற்போதைய நிலவரத்தை பொறுத்த விஷயமாக உள்ளது. ‘அனைத்து நாடுகளும், ஒரே நேரத்தில், ஒரே விதமான முடிவுகளை எடுத்துவிட முடியாது. ஒரு சில நாடுகள் எடுக்கும் அவசர முடிவுகள், ஆபத்தில் முடியலாம்’ என, வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.