உத்தர பிரதேசத்தில் வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை பொது இடங்களில் மக்கள் கூட்டம் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
லக்னோ,
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால், ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? எல்லது நிபந்தனைகளுடன் தளர்த்தப்படுமா? என்பது மக்கள் மத்தியில் பில்லியன் டாலர் கேள்வியாக தற்போதய சூழலில் உள்ளது.
இந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தில் வரும் ஜூன் 30 -ஆம் தேதி வரை கூட்டம் கூட அனுமதிக்கக் கூடாது என அதிகாரிகளுக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உத்தரப்பிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவு கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
ஜூன் 30 -ஆம் தேதி வரை பொது நிகழ்ச்சிகள் எதுவும் நடத்துவதற்கு அனுமதிக்கக் கூடாது. நிலைமையைப் பொறுத்தே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து விதமான பொது நிகழ்ச்சிகள் முழுமையாக ரத்து செய்யப்படும். யாரும் இதுதொடர்பாக எந்த ஏற்பாடுகளையும் செய்ய வேண்டாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் , 1,621 பேர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் 247 -பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர், 25 பேர் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.