புதுடில்லி: கொரோனா தாக்கம் அதிகரித்துவரும் வேளையில் பலர் வேலை இழந்துள்ளனர். பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய நிறுவனங்கள் வரை அனைத்தும் தங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் திண்டாடி வருகின்றன. இதனால் நூற்றுக்கணக்கான ஒப்பந்த அடிப்படியில் வேலைக்குச் சேர்ந்த ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர்.
கொரோனா தாக்கத்தால் பலத்த சரிவு கண்டிருக்கும் துறைகளில் முக்கியமானது மார்கெட்டிங் துறை. இதில் வேலை செய்த பலர் வெளி வேலைகளில் ஈடுபட்டு இருப்பதால் இவர்களது வேலை பறிபோயுள்ளது. புக் மை ஷோ, ஓயோ, உடான் உள்ளிட்ட நிறுவனங்கள் அதீத ஆட்குறைப்பில் ஈடுபட்டுள்ளன. பல நிறுவங்களில் நிர்வாகிகள் வேலை பறிபோகாது என சில மாதங்களுக்கு முன்னர் ஊழியர்களுக்கு உறுதி அளித்து விட்டு பின்னர் வேலையை ராஜினாமா செய்ய உத்தரவிடுகின்றன. இதுகுறித்து இணையத்தில் பலத்த விவாதம் நடைபெற்று வருகிறது.
வேலை இழந்த ஊழியர்கள் ஒருபுறம் வேலை இழப்பை அடுத்து இணையத்தில் மனக் குமுறலை டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கொட்டி வரும் நிலையில் மறுபுறம் என பெரிய சேவை நிறுவனங்கள் தடுமாறி வருகின்றன. கொரோனா முடிவுக்கு வந்ததும் பல ஆன்லைன் வர்த்தக, இடைத்தரகு நிறுவனங்கள் பலத்த நஷ்டம் அடையும் எனப்படுகிறது. 2021ம் ஆண்டு பலர் தங்கள் துறையில் வாய்ப்பில்லாமல் வேறு துறையை தேர்ந்தெடுத்து வேலை செய்யும் அபாயத்துக்குத் தள்ளப்பட உள்ளனர் என்கிறார் ஓர் நிறுவனத்தின் மூத்த அதிகாரி.
பலர் பாதி சம்பளத்துக்கு வீட்டில் இருந்து வேலை செய்து வரும் நிலையில் ரியல் எஸ்டேட், காப்பீடு, ஆன்லைன் மார்கெட்டிங் உள்ளிட்ட துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் அந்த துறையில் தங்களது முன் அனுபவத்தை வைத்து மீண்டும் வேலைக்கு சேர்ந்து மேல் எழுவது மிகக் கடினம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பல வருடங்களாக தனியார் நிறுவனங்களில் வேலை செய்து அனுபவம் உள்ள இளம் தொழில் முனைவோர், புதிய தொழில் தொடங்கும் கனவோடு இருந்தனர். இவர்கள் கொரோனாவுக்குப் பின்னர் வாழ்வாதாரம் கருதி மீண்டும் சொற்ப சம்பளத்துக்கு வேலைக்குச் செல்லும் நிலை உண்டாகுமென கூறப்படுகிறது.
ரிவிகோ, ஓலா, பேடியம், குவிக்கர், சொமேட்டா உள்ளிட்ட நிறுவனங்கள் கடந்த ஆண்டே தங்களது ஆரம்ப ஊழியர்கள் பலரை வேலையை விட்டு நிறுத்தியது. தற்போது பல கோடி கடனில் மூழ்கியுள்ள ஆன்லைன் நிறுவனங்கள் பழைய நிலைக்கு வர பல மாதங்கள் பிடிக்கும். அதுவரை இந்த நிறுவனங்களில் நிர்வாகப் பொறுப்பு வகித்த பலர் வேலையின்மையால் அவதிப்படுவர்.