இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் குறைந்தது – முதல்முறையாக 6 சதவீதம் பதிவு

Spread the love

 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் குறைந்துள்ளது. முதல்முறையாக தினசரி வளர்ச்சி விகிதம் 6 சதவீதமாக பதிவாகி உள்ளதாக மத்திய மந்திரிகள் குழு கூட்டத்தில் வெளியாகின.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் குறைந்தது – முதல்முறையாக 6 சதவீதம் பதிவு

புதுடெல்லி:

கொரோனா வைரஸ் என்ற கொலைகார வைரஸ் பிடியில் இருந்து இந்தியா கொஞ்சம் கொஞ்சமாய் மீண்டு வருவதற்கான நம்பிக்கை வெளிச்சம் தென்படத்தொடங்கி உள்ளது.

இந்த தருணத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான விவகாரங்களை கையாள்வதற்கான உயர்மட்ட அளவிலான மத்திய மந்திரிகள் குழுவின் 13-வது கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது.

இந்த கூட்டத்துக்கு மத்திய சுகாதாரதுறை மந்திரி டாக்டர் ஹர்சவர்தன் தலைமை தாங்கினார்.

குழுவில் இடம் பெற்றுள்ள மூத்த மத்திய மந்திரிகள் ஹர்தீப் சிங் பூரி, எஸ்.ஜெய்சங்கர், நித்யானந்த ராய், மன்சுக் மாண்டவியா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கொரோனா வைரஸ் பரிசோதனை

இந்த கூட்டத்தின்போது, கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக மாநிலம் தோறும் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஆஸ்பத்திரிகள் மற்றும் அவற்றில் உள்ள தனிமை வார்டுகள், படுக்கை வசதிகள், பி.பி.இ. என்னும் சுய பாதுகாப்பு கருவிகள் கையிருப்பு, என்-95 முக கவசங்கள், மருந்துகள், செயற்கை சுவாச கருவிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்டவற்றின் கையிருப்பு குறித்து அதிகாரிகள் தரப்பில் விளக்கம் தரப்பட்டது.

சுய பாதுகாப்பு கருவிகள், முக கவசங்கள் தயாரிக்க அடையாளம் காணப்பட்ட உள்நாட்டு நிறுவனங்கள், தங்கள் உற்பத்தியை தொடங்கி விட்டதாக தெரிவிக்கப்பட்டது. தினமும் நாட்டில் 1 லட்சத்துக்கும் அதிகமான சுய பாதுகாப்பு கருவிகள், என்-95 முக கவசங்கள் தயாரிக்கப்படுவதாகவும், 104 உள்நாட்டு நிறுவனங்கள் சுய பாதுகாப்பு கருவிகள் தயாரிப்பிலும், என்-95 முக கவசங்கள் தயாரிப்பில் 3 உள்நாட்டு நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

செயற்கை சுவாச கருவிகளை உள்நாட்டில் தயாரிப்பதுடன், 9 நிறுவனங்கள் மூலமாக 59 ஆயிரம் கருவிகளுக்கு ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

மத்திய மந்திரிகள் குழு, நாடு முழுவதும் உள்ள சோதனை கருவிகளின் கையிருப்பு, தீவிரமாக கொரோனா வைரஸ் தொற்று பரவுகிற ‘ஹாட் ஸ்பாட்’ பகுதிகளில் பின்பற்றப்பட வேண்டிய உத்தி குறித்தும் ஆராயப்பட்டது.

கொரோனா வைரஸ் பரவல் நிலை குறித்த விரிவான விளக்க காட்சி காட்டப்பட்டது. கொரோனா வைரசுக்கு எதிரான பதில் நடவடிக்கைகளும், நோயை நிர்வகிக்கும் விதமும் விளக்கப்பட்டது.

மத்திய அரசு எடுத்துள்ள தடுப்பு நடவடிக்கைகள், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள், கட்டுப்படுத்தும் விதம், மாவட்டங்கள் பின்பற்ற கூறப்படும் ஆலோசனைகள், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தேவையான தற்செயல் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட நம்பிக்கையூட்டும் தகவல்கள் வருமாறு:-

* நமது நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோய் தாக்கி ஏற்படும் உயிரிழப்பு சதவீதம் 3.1 சதவீதம் ஆகும். அதே நேரத்தில் குணம் அடைவோர் விகிதாசாரம் 20 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. இது, வளர்ந்த நாடுகளை விட அதிக விகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.

* நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதல் நபர்களின் இரட்டிப்பு விகிதம், தற்போதைய நிலவரப்படி 9.1 நாட்கள் ஆகும். இது கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வருவதை எடுத்துக்காட்டுகிற முன்னேற்ற நிலை ஆகும்.

* தற்போது குணம் அடைந்தோர் எண்ணிக்கை 5,062 ஆகும். இது 20.66 சதவீதம்.

* நேற்றுமுன்தினம் (வெள்ளிக்கிழமை) காலை 8 மணி முதல் நேற்று வரை 1,429 பேருக்கு கொரோனா வைரஸ் புதிதாக தாக்கி உள்ளது. மொத்தம் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 506 ஆக உயர்ந்து இருக்கிறது.

கொரோனா வைரஸ் பரிசோதனையில் மருத்துவர்கள் – கோப்புக்காட்சி

* நமது நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை 100-ஐ கடந்த பிறகு முதன்முதலாக நேற்றுதான் பாதிப்பு வளர்ச்சி வீதம் மிகக்குறைவான அளவில் 6 சதவீதம் என்ற அளவை பதிவு செய்து உள்ளது.

* கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 775 ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு கொரோனா வைரஸ் விவகாரத்தை கையாள்வதற்கான உயர்மட்ட அளவிலான மத்திய மந்திரிகள்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page