இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 1,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 27 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனாவால் ஒரு நாளைக்கு எத்தனை பேர் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை மத்திய சுகாதார அமைச்சகம் தினந்தோறும் அறிவித்து வருகிறது. அதன்படி நேற்று மாலை வெளியிடப்பட்ட புள்ளி விவரம், இதுவரை இல்லாத அளவில் இந்த வைரசால் புதிதாக 1,975 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக காட்டுகிறது. இதற்கு முன்பு கடந்த 24-ந் தேதி 1,752 பேர் பாதிக்கப்பட்டதே ஒரு நாளில் ஏற்பட்ட அதிகபட்ச பாதிப்பாக இருந்தது. நாட்டில் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 26,917 ஆக அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 111 பேர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் தொற்றால் புதிதாக 47 பேர் உயிரிழந்துள்ளதால், பலியானவர்களின் எண்ணிக்கையும் 826 ஆக உயர்ந்து இருக்கிறது. இந்த வைரஸ் பிடியில் சிக்கி இருந்தவர்களில் 5,914 பேர் மீண்டு வந்துள்ளதாகவும், 20,177 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரசின் கோரப்பிடியில் ஆரம்பம் முதலே சிக்கி தவித்து வரும் மராட்டியத்தில் 7,600-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 323 பேரின் உயிரை இந்த வைரஸ் காவு வாங்கிவிட்டது. குஜராத்தில் திடீரென வேகமாக பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் அங்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பாதிப்புக்கு உள்ளாக்கி இருப்பதுடன், 133 பேரை உயிரிழக்கவும் செய்துவிட்டது.
தேசிய தலைநகர் டெல்லியிலும் தனது கோர முகத்தை கொரோனா காட்டி வருகிறது. அங்கு 2,600-க்கும் அதிகமானவரை தனது வலையில் விழ வைத்திருக்கும் கொரோனா, 54 பேரின் உயிரையும் பறித்து விட்டது. அடுத்த இடங்களில் உள்ள ராஜஸ்தானில் 2,100-க்கும் அதிகமானோரையும், மத்திய பிரதேசத்தில் 1,945 பேரையும் வைரஸ் பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது.
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று அதிகம் கண்டறியப்பட்ட 5 மாநகராட்சிகளில் நேற்று முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. ஆனாலும் புதிதாக 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,885 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரில் 9 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு ஒருவரின் உயிரை இந்த வைரஸ் பறித்து உள்ளது.
தமிழகத்தின் அண்டை மாநிலங்களிலும் கொரோனா தனது கொடிய கரத்தால் பலரையும் பற்றிக்கொண்டு பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது. ஆந்திராவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை தாக்கி உள்ள கொரோனா, கர்நாடகத்தில் 500-க்கும் அதிகமானோரை பாதித்துள்ளது.
கேரளாவில் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 468 ஆக அதிகரித்துள்ளது.