கொரோனாவுக்கு எதிராக நாட்டு மக்கள் ஒருங்கிணைந்து போராடுவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி,
பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ என்ற பெயரில் வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
அதுபோல் இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்றும் அவர் உரையாற்றினார். அப்போது கொரோனாவுக்கு எதிராக இந்திய மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவது குறித்தும். மத்திய, மாநில அரசுகளும் உள்ளாட்சி அமைப்புகளும் கொரோனாவுக்கு எதிரான போரில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளதையும் மருத்துவம், காவல்துறை, ரெயில்வே, விமானத்துறை உள்ளிட்ட பல்வேறு துறையினரின் பங்களிப்பு குறித்தும் குறிப்பிட்டார்.
அவர் பேசுகையில் கூறியதாவது:-
மக்கள் நடத்தும் போராட்டம்
கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் மக்களால் நடத்தப்படும் போராட்டம். மக்கள் ஒருங்கிணைந்து இந்த போராட்டத்தை நடத்துகிறார்கள். அரசாங்கமும், நிர்வாகமும் மக்களுடன் இணைந்து நடத்துகிறது. இன்று இந்திய மக்கள் ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக நிற்க முன்வந்துள்ளார்கள்.
நலிந்தவர்களுக்கு உணவு, அத்தியாவசிய பொருட்கள் வழங்குதல், ஊரடங்கை சாத்தியமாக்குதல், தேவையான மருத்துவ உபகரணங்களை உள்நாட்டிலேயே தயாரித்தல் என்று நாடே ஒரே திசையில் ஒரே நோக்கத்துடன் முன்னோக்கி பயணித்து வருகிறது.
இந்த நாட்டில் யாரும் பட்டினி கிடக்கக்கூடாது என்ற உயரிய நோக்கில் நம்முடைய விவசாய சகோதரர்கள் இந்த நோய்த்தொற்று நேரத்திலும் இரவு பகல் பாராது கடுமையாக உழைத்து வருகிறார்கள். ஒவ்வொருவரும் அவரவருடைய சக்திக்கு ஏற்ப தங்களின் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள்.
உத்வேகம்
சிலர் வீட்டு வாடகைக்கு விலக்கு அளிக்கிறார்கள். சிலர் தங்கள் பரிசுத்தொகை மற்றும் ஓய்வூதியத் தொகையை பிரதமரின் நிதிக்கு வாரி வழங்குகிறார்கள். சிலர் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகளை இலவசமாக அனைவருக்கும் அளிக்கிறார்கள். சிலர் இடம் பெயர்ந்தவர்களுக்கு உணவு வழங்குகிறார்கள். சிலர் வீட்டில் முக கவசம் தயாரித்து பிறருக்கு அளிக்கிறார்கள்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டுக்கு ஏதாவது ஒருவகையில் பங்களிப்பு நல்க வேண்டும் என்ற உத்வேகத்தை இது வழங்கி உள்ளது.இந்த நாட்டின் 130 கோடி மக்களின் இதுபோன்ற உணர்வுக்கு நான் தலைவணங்குகிறேன்.
இணையதளம்
இந்த உற்சாகத்தை கருத்தில் கொண்டு தற்போது அரசு cov-i-dw-a-r-r-i-ors.gov.in என்ற இணைய தளத்தை அறிமுகப்படுத்துகிறது.
இதன் மூலம் சமூகநல அமைப்புகளின் தொண்டர்கள், உள்ளாட்சி நிர்வாகிகள் ஆகியோர் ஒரே தளத்தில் இணைக்கப்படுகின்றனர். இதில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் பல துறைகளின் வித்தகர்கள் ஆகியோரும் இணைக்கப்படுவார்கள். நீங்களும் இதில் இணைந்து கொரோனாவுக்கு எதிரான போரில் பங்கேற்கலாம்.
மருத்துவ பணியாளர்கள்
மத்திய, மாநில அரசுகள் மற்றும் ஒவ்வொரு துறையும் நிறுவனங்களும் கைகோர்த்து இன்று மீட்புப் பணிகளில் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஊழியர்கள் தோளோடு தோள் நின்று பங்கேற்று வருகிறார்கள்.
நம்முடைய மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் அவசர சட்டம் இயற்றப்பட்டுள்ளதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள். இவர்கள் அனைவரும் கொரோனாவை முற்றாக ஒழிக்கும் பணியில் தற்போது முழுமூச்சுடன் களப்பணி ஆற்றிவருகிறார்கள்.
மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், காவல் துறையினர் ஆகியோரை பொதுமக்கள் இப்போது புதிதாக மிகவும் வணங்கத்தக்க வகையில் பார்க்க தொடங்கி இருக்கிறார்கள்.
நாம் நம்முடைய தேவையை பூர்த்தி செய்து கொண்ட அதேவேளையில் உலக நாடுகளுக்கும் தேவையான மருந்தை அனுப்பி வைத்தோம். உலகின் பல நாடுகள் நம்முடைய ஆயுர்வேத மருத்துவ முறைகளையும் யோகாவையும் கடைப்பிடிக்க தொடங்கி இருக்கின்றன. நோய் எதிர்ப்பு சக்திக்கு இந்தியா கடைப்பிடிக்கும் வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்படுகின்றன.
நாம் நம்மிடம் உள்ள மேலான விஷயங்களை ஏற்க தயங்குகிறோம். இதையே மேலை நாட்டவர்கள் சொன்னால் நாம் அதை உடனே ஏற்றுக்கொள்கிறோம். யோகாவை உலகம் ஏற்றுக் கொண்டது போல நம்முடைய ஆயுர்வேதத்தையும் உலகம் ஒருநாள் ஏற்கும்.
எச்சில் துப்பாதீர்கள்
கொரோனா நோய்த் தொற்றை தடுக்க நாம் முக கவசம் பயன்படுத்த துவங்கி இருக்கிறோம். இது நம்முடைய வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிடும். ஒருகாலத்தில் யாராவது கடையில் பழம் வாங்கினால் வீட்டில் யாருக்காவது உடல் நலக் குறைவா என்று கேட்பார்கள். இப்போது பழம் வாங்குவது அன்றாட நடைமுறையாகி விட்டது. யாரும் அதுபோல கேட்பது இல்லை.
இதேபோல முக கவசமும் நம்முடைய கலாசாரத்தின் ஒரு அங்கமாக மாறப்போகிறது. உங்களையும் மற்றவர்களையும் நோய்த்தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள முக கவசத்தை பயன்படுத்துங்கள். பொது இடங்களில் எச்சில் துப்பாதீர்கள். இவை கொரோனாவில் இருந்து நம்மை விலக்கி வைக்கும்.
பிரார்த்தனை
புனித ரமலான் மாதம் தொடங்கி விட்டது. ரமலான் பண்டிகைக்கு முன்பே நாம் இந்த கொரோனாவில் இருந்து முற்றாக விடுதலை பெறுவோம் என்று பிரார்த்தனை செய்து கொள்வோம்.
கொரோனா இன்னும் நம்முடைய நகரத்தில், நம்முடைய கிராமத்தில், நம்முடைய வீதியில் அல்லது அலுவலகத்தில் யாருக்கும் வரவில்லை என்ற ஒரு எண்ணத்தை நாம் வளர்க்கக் கூடாது. இது போன்ற தவறை எப்போதும் செய்யாதீர்கள். உலகில் பலரும் பெற்ற அனுபவம் நமக்கு பாடத்தை கற்பித்து உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.