மத்திய சுகாதாரத்துறை செயலாளர் பிரீத்தி சுதனுக்கு 3 மாதம் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் பல முக்கிய அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி,
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவி வருகிற நிலையில், அதற்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கி விடுவதில் முக்கிய பங்கு வகிப்பவர், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் பிரீத்தி சுதன். இவரது பதவிக்காலம் வரும் 30ந்தேதியுடன் முடிகிறது. இதையடுத்து அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படுமா? என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் அவரது பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அவர் தொடர்ந்து அந்தப்பதவியில் இருப்பார்.
பிரதமர் மோடி தலைமையிலான நியமனங்களுக்கான மத்திய மந்திரிகள் குழு, இதற்கான ஒப்புதலை வழங்கி உள்ளது. இதை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சக உத்தரவு தெரிவிக்கிறது.
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பதவி வகித்து வந்த முக்கிய அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். அது பற்றிய விவரம் வருமாறு:-
* ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக பதவி வகித்து வந்த ராஜேஷ் பூஷண் மாற்றப்பட்டுள்ளார். இவர் சுகாதார துறையில் செயலாளர் அந்தஸ்தில் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரீத்தி சுதன் ஓய்வு பெறுகிறபோது, இவர் சுகாதாரத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்க வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
* ஊரக வளர்ச்சித்துறையின் புதிய செயலாளராக நாகேந்திரநாத் சின்கா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதுவரை உள்துறை அமைச்சகத்தில், எல்லை பாதுகாப்பு செயலாளராக இருந்து வந்தார்.
* பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறையின் சிறப்பு செயலாளராக இருந்து வந்த பிரதீப் குமார் திரிபாதி, உருக்குத்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
* டெல்லி வளர்ச்சி குழுமத்தின் (டிடிஏ) துணைத்தலைவர் தருண் கபூர், பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்த பதவியில் இருந்து வருகிற எம்.எம்.குட்டி வரும் 30ந்தேதி ஓய்வு பெறுகிறார்.
* பிரதமர் அலுவலகத்தில் கூடுதல் செயலாளராக பதவி வகித்து வந்த தருண் பஜாஜ், பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் ஆகிறார்.
* மத்திய இடைநிலை கல்வி வாரியம் சி.பி.எஸ்.இ.யின் தலைவர் அனிதா கர்வால், கல்வி மற்றும் எழுத்தறிவு துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.