சென்னை,
15-வது நிதிக்குழு சம்பந்தமாக மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
எதிர்க்கட்சி தலைவர், 15-வது நிதிக்குழுவிடம் இருந்து தமிழ்நாடு என்ன பெற்றுள்ளது என்பது குறித்து கொரோனா தடுப்பு பணியில் உலகமே ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், ஒரு தேவையில்லாத சர்ச்சையை கிளறி உள்ளார். பிப்ரவரி 14, 2020 அன்று நான் சட்டமன்றத்தில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் 2020-21-ம் ஆண்டில், 15-வது நிதிக் குழுவின் முதல் அறிக்கையினால் தமிழ்நாட்டிற்கு என்ன சாதகங்கள் மற்றும் என்ன பாதகங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை குறித்து தெளிவாகவும், விளக்கமாகவும் குறிப்பிட்டிருந்தேன்.
2020-21-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் பத்தி 8-ல் நான் மிக தெளிவாக பின்வருமாறு குறிப்பிட்டிருந்தேன். மத்திய வரிகளில் மாநில அரசுகளுக்கான நிதிப்பகிர்வை 42 சதவீதத்திலிருந்து 41 சதவீதமாகக் குறைக்குமாறு நிதிக்குழு பரிந்துரை செய்துள்ளது. இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு, மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் வரி வருவாயிலிருந்து இனி பங்கு அளிக்கப்படாது என்பதைக் கருத்தில் கொண்டால், மொத்த நிதிப்பகிர்வில் பரிந்துரைக்கப்பட்டுள்ள குறைப்பினால், மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் வரி வருவாயில் பெரும் பாதிப்பு இருக்காது.
தமிழ்நாடு போன்ற குறிப்பாக நிர்வகிக்கப்படும் மாநிலத்திற்கு சரியான கணக்கீடுகள் மூலம், போதிய நிதிப்பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்ற நமது கோரிக்கையை நாம் 15-வது நிதிக்குழுவின் முன்பு தொடர்ந்து மீண்டும் வலியுறுத்துவோம். வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் போதிய நிதி ஒதுக்கீடு இல்லை என்றால் கூடுதல் தொகை துணை மானிய கோரிக்கைகளின் மூலமாகவும், திருத்திய வரவு செலவு மதிப்பீடுகளின் மூலமாகவும் பெறுவதற்கு முழு வாய்ப்பு உள்ளது.
எனவே வருவாய் பற்றாக்குறை மானியமாக தமிழ்நாடு பெற வேண்டிய முழு தொகையையும் இந்த ஆண்டுக்குள் இந்த அரசு தமிழ்நாட்டிற்குப் பெற்றுத் தரும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.
15-வது நிதிக்குழுவின் அடிப்படை தகவல்களை தெரிந்துகொள்ளாமலேயே எதிர்க்கட்சித் தலைவர் தேவையில்லாத, எந்தவிதமான அடிப்படையும் இல்லாமல் ஒரு சர்ச்சையை ஏற்படுத்துகிறார். தமிழ்நாட்டிற்கும், தமிழ் மக்களுக்கும் ஒருபொழுதும் அநீதி ஏற்படக்கூடாது என்பதுதான் எங்களின் கொள்கை. அந்தக் கொள்கையிலிருந்து நாங்கள் சிறிதும் பின்வாங்கவில்லை, பின்வாங்கவும் மாட்டோம்.
இந்திய நாடும், தமிழ்நாடும் கொடூரமான கொரோனா நோயை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில் மக்களுக்காக ஆற்றவேண்டிய உடனடி பணிகளைப் பற்றி கவலைப்படாமல் ஏற்கனவே பலமுறை தெளிவுபடுத்தப்பட்ட பிரச்சினைகள் குறித்து தேவையில்லாத சர்ச்சைகளை மீண்டும் மீண்டும் மு.க.ஸ்டாலின் கிளறுவது கண்டிக்கத்தக்கது. இந்த அரசு தமிழ்நாட்டின் உரிமைகளையும், தமிழக மக்களின் நலன்களையும் யாருக்காகவும், யாரிடமும் விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்து முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.