வியாபாரிகளிடம் வசூலிக்கப்படும் சந்தை கட்டணம் மே மாதம் வரை ரத்து – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Spread the love

சேமிப்பு கிடங்குகளில் விளை பொருட்களை வைக்க விவசாயிகளுக்கு மேலும் ஒரு மாதம் கட்டணம் கிடையாது என்றும், வியாபாரிகளிடம் வசூலிக்கப்படும் சந்தை கட்டணமும் மே மாதம் வரை ரத்து செய்யப்படுவதாகவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் கொரோனா தாக்குதலைக் கட்டுப்படுத்திட அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. விளை பொருட்களை விற்பனைக்கு எடுத்துச் செல்வதில் உள்ள பிரச்சினைகளை களைந்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உள்ள நவீன சேமிப்புக் கிடங்குகளில் விவசாயிகள் விளை பொருட்களை 180 நாட்கள் வரை வைத்து பாதுகாத்திடலாம். அதிக விலை கிடைக்கப்பெறும் காலங்களில் விளை பொருட்களை எடுத்து விற்க, கிடங்கு வாடகைக் கட்டணத்தை முதல் 30 நாட்களுக்கு செலுத்த தேவையில்லை என அரசு ஏற்கனவே ஆணையிட்டிருந்தது. அது மேலும் ஒரு மாத காலம் நீட்டிக்கப்படுகிறது.

கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள விளை பொருட்களை அடமானத்தின் பேரில் அதிகபட்சம் 50 சதவீத சந்தை மதிப்பு அல்லது ரூ.3 லட்சம் இவற்றில் எது குறைவோ அந்த அளவுக்கு பொருளட்டு கடனைப் பெற்றிடலாம். கடனிற்கான கால அளவு 180 நாட்கள் ஆகும். இதற்கான வட்டி 5 சதவீதமாகும். கடனிற்கான வட்டி முதல் 30 நாட்களுக்கு செலுத்த தேவையில்லை என ஆணையிடப்பட்டிருந்தது. அது மேலும் ஒரு மாத காலம் நீட்டிக்கப்படுகிறது.

பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி காய்கறிகள் மற்றும் பழங்கள் கிடைக்கவும், அவற்றை பாதுகாத்து, தேவைப்படும் காலங்களில் விற்பனை செய்ய ஏதுவாகவும், விவசாயிகளின் பயன்பாட்டிற்காக குளிர்பதனக் கிடங்குகள் இயங்கி வருகின்றன. இக்கிடங்குகளில் காய்கறிகள் மற்றும் பழங்களை சேமித்து வைக்க விவசாயிகளிடம் இருந்து பயன்பாட்டுக் கட்டணத் தொகை வசூலிக் கப்பட்டு வருகின்றது.

தற்போதுள்ள சூழ்நிலையினை கருத்தில் கொண்டும், மேலும் 15 நாட்களில் மாம்பழம் உற்பத்தி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாலும், விவசாயிகளிடம் இருந்து வசூலிக்கப்படும் இப்பயன்பாட்டு கட்டணத் தொகை 30-4-2020 வரை வசூலிக்கப்படமாட்டாது என்றும், இக்கட்டணத்தை முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சலுகை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீட்டிக்கப்படுகிறது.

தற்போது நெல், சிறு தானியங்கள், பயறு வகைகள், நிலக்கடலை, எள், தேங்காய், பருத்தி, வெங்காயம், மிளகாய், புளி, முந்திரி, வெல்லம், மரவள்ளி மற்றும் சில மாவட்டங்களில் பழங்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட விளை பொருட்களை விவசாயிகள் விற்பனை செய்யும்போது, வியாபாரிகளிடம் இருந்து விற்பனை மதிப்பில் 1 சதவீதம் சந்தைக் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது. தற்போது நிலவி வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் விளை பொருட்களை நியாயமான விலையில், பொதுமக்களுக்கு விநியோகம் செய்திட ஏதுவாக, தற்போது வியாபாரிகள் செலுத்தும் 1 சதவீத சந்தைக் கட்டணத்தை 30-4-2020 வரை ரத்து செய்யப்பட்டு இருந்தது. இந்த சலுகை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீட்டிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page