சீனாவில் வாங்கப்பட்ட ரேபிட் டெஸ்ட் கிட் தவறான முடிவை தருகிறது என எழுந்த புகார் அடிப்படையில் அதை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சீனாவிடம் இருந்து வாங்கிய ரேபிட் டெஸ்ட் கிட்டை பயன்படுத்த வேண்டாம்: ஐசிஎம்ஆர்
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சீனாவில் பரவத் தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் தற்போது அங்கு கட்டுக்குள் இருக்கிறது. ஆனால் மற்ற நாடுகளை வெகுவாக பாதித்து வருகிறது.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியுள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2, 07,094 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 8,82,552 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது. கொரோனா பாதிப்பை விரைவில் கண்டறிய சீனாவில் இருந்து ரேபிட் டெஸ்ட் கருவியை பல நாடுகள் வாங்கியுள்ளன. இந்தியாவும் சீனாவில் இருந்து வாங்கியது.
இதனிடையே ரேபிட் டெஸ்ட் தவறான முடிவுகளை தருவதாக ராஜஸ்தான், மேற்கு வங்காளம் உள்ளிட்ட சில மாநிலங்களில் புகார்கள் எழுந்தன.
இதையடுத்து புதிதாக வந்துள்ள ரேபிட் டெஸ்ட் கிட்டை கொண்டு இரண்டு நாட்களுக்கு பரிசோதனை செய்ய வேண்டாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கேட்டுக்கொண்டது. மேலும், ரேபிட் டெஸ்ட் கிட்டை மீண்டும் பயன்படுத்துவது குறித்த அறிவுறுத்தல் விரைவில் வழங்கப்படும் என்றும் தெரிவித்தது.
இதன்பின்னர், மாநில அரசுகள் கொரோனாவை கண்காணிக்க மட்டுமே ரேபிட் டெஸ்ட் கிட்டை பயன்படுத்தலாம் எனவும் கொரோனாவை கண்டறிய பிசிஆர் டெஸ்ட் அவசியம் எனவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கம் அளித்தது.
இந்நிலையில் வோன்ஃபோ நிறுவனத்திடம் இருந்து வாங்கிய ரேபிட் டெஸ்ட் கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
அத்துடன் சீனாவை சேர்ந்த வோன்ஃபோ நிறுவனம் 4 விதமான விலை பட்டியலை தந்தது. மிக குறைந்த விலையான ரூ. 600-க்கு ரேபிட் கிட் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.முன் பணம் எதுவும் கொடுக்காததால் இழப்பு எதுவும் இல்லை என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.