சென்னை,
கொரோனா பாதிப்பில் தமிழகம் 6-வது இடத்தில் உள்ளது.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால், கிராமப்புறங்களில் நோய்த்தொற்று பரவுவது பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் பெரு நகரங்களில் கொரோனாவின் தாக்கம் குறையவில்லை.
இதனால் சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் 26-ந்தேதி முதல் 4 நாட்களும், இதேபோல் கொரோனா நோய்த்தொற்றில் அடுத்த நிலையில் உள்ள சேலம், திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் 28-ந்தேதி வரை 3 நாட்களும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட இருப்பதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் அறிவித்தார்.
அதன்படி, சென்னை, கோவை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளிலும் நேற்று முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.
முழு ஊரடங்கின் முதல் நாளான நேற்று சென்னை நகரம் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது. வாகன போக்குவரத்தும் வெகுவாக குறைந்தது.
நகரின் பல்வேறு பகுதிகளில் காலையில் பரவலாக மழை பெய்ததாலும், முழு ஊரடங்கின் காரணமாகவும் அண்ணாசாலை, மெரினா காமராஜர் சாலை, பசுமை வழிச்சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஜி.எஸ்.டி. சாலை, தியாகராயநகர் உஸ்மான் சாலை உள்ளிட்ட நகரின் பிரதான சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. அவ்வப்போது வந்த ஒரு சில வாகன ஓட்டிகளையும் போலீசார் எச்சரித்து விரட்டியடித்ததை பார்க்க முடிந்தது.
ஊரடங்கு அமலில் இருந்தாலும் இதுநாள் வரையிலும் அத்தியாவசிய கடைகள், மளிகை கடைகள், ஓட்டல்கள் திறக்கப்பட்டு இருந்ததை காணமுடிந்தது.
ஆனால் நேற்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. பெரும்பாலான ஓட்டல்களும் மூடப்பட்டு இருந்தன. திறந்திருந்த சில ஓட்டல்களிலும் ஆன்லைன் மூலம் உணவு வழங்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் மட்டுமே நிற்பதை பார்க்க முடிந்தது.
தேவை இல்லாமல் வெளியே சுற்றுபவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்தது. அம்மா உணவகங்கள் வழக்கம் போல் திறந்து இருந்தன. அங்கு ஏராளமானோர் வந்து உணவு அருந்தினர்.
முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டாலும் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் வழக்கம் போல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அதிகாலை வரை காய்கறி வரத்து இருந்தது. ஆனால் நேற்று முன்தினமே பொதுமக்கள் அதிக அளவில் வந்து தேவையான காய்கறிகளை வாங்கிச் சென்றுவிட்டதால், நேற்று அங்கு மக்கள் கூட்டம் குறைவாக இருந்தது.
காலை 7 மணிக்கு பிறகு மார்க்கெட் வெறிச்சோட தொடங்கியது. மார்க்கெட் நுழைவுவாயில்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
சென்னையை போலவே புறநகரில் அடங்கியுள்ள உள்ள காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட பகுதிகளிலும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் புறநகர் பகுதிகளும் மக்கள் நடமாட்டம் இன்றியும், வாகன போக்குவரத்து இன்றியும் முடங்கின. கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.
சென்னை நகர மக்கள் முழு ஊரடங்குக்கு நேற்று நல்ல ஒத்துழைப்பு வழங்கியதாக சமூக வலைத்தளங்களில் வைரலாக தகவல் பரவியது. மக்கள் ஒத்துழைப்புக்கு பாராட்டு தெரிவித்து மீம்ஸ்களும் வெளியாயின.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், “ஊரடங்கு அமலில் இருந்தாலும் இதுபோன்ற ஒத்துழைப்பை மக்கள் வழங்கவில்லை. நோய்த்தொற்று வீரியம் தெரியாமல் ஆங்காங்கே சுற்றிக்கொண்டிருப்பதையே பார்க்க முடிந்தது. ஆனால் முதல்-அமைச்சர் அறிவித்த முழு ஊரடங்கை ஏற்று முழு ஒத்துழைப்பை மக்கள் அளித்து உள்ளனர். வரும் நாட்களில் மக்கள் இதேபோல ஒத்துழைப்பு அளிக்கும் பட்சத்தில் கொரோனாவை எளிதாக நம்மால் விரட்டியடிக்க முடியும்” என்றனர்.
கோவை, மதுரை
சென்னையை போலவே கோவை, மதுரை மாநகராட்சிகளிலும் நேற்று முழு ஊரடங்கு தொடங்கியது. இதேபோல் சேலம், திருப்பூர் மாநகராட்சி பகுதிகளிலும் 3 நாள் முழு ஊரடங்கு தொடங்கியது. இந்த நகரங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. வாகனங்களும் ஓடவில்லை. மக்களும் வெளியே வராமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கினார்கள்.
கோவையில் முழு ஊரடங்கையொட்டி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. நகரின் எல்லை பகுதிகளில் உள்ள 12 சோதனைச்சாவடிகள் மூடி சீல் வைக்கப்பட்டன. மேலும் 22 இடங்களில் தற்காலிகமாக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. மருந்து கடைகளில் மருந்து வாங்க சென்றவர்கள், டாக்டர் சீட்டு இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
மதுரை நகரில் மருந்தகங்கள், பால் விற்பனை நிலையங்கள் தவிர அனைத்துக்கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. மாநகராட்சி சார்பில் வாகனங்கள் மூலம் காய்கறி கொண்டு சென்று பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. ஒரு சில இடங்களில் அத்தியாவசிய தேவைக்கு வெளியே வந்தவர்களை மட்டும் போலீசார் விசாரணை நடத்தி அனுமதித்தனர்.
சேலம், திருப்பூர் மாநகராட்சி பகுதிகளும் நேற்று மக்கள் நடமாட்டம் இன்றியும், வாகன போக்குவரத்து இன்றியும் முடங்கின.
தஞ்சை, நாகை மாவட்டங்கள்
தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் நேற்று ஒரு நாள் மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அந்த மாவட்டங்களிலும் காய்கறி கடைகள், மளிகை கடைகள், இறைச்சி கடைகள் என அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன. ஆனால் மருந்து கடைகள் வழக்கம் போல் திறந்து இருந்தன.
முழு ஊரடங்கை மீறி வெளியே வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். விழுப்புரத்தில் வாகனங்களில் வெளியே வந்தவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
அரியலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கு நேற்றும் நீடித்தது.
சேலம் மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டதால் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன. கடைகள், உழவர் சந்தைகள், காய்கறி சந்தைகள் மூடப்பட்டு இருந்தன.
நெல்லை, தென்காசி
நெல்லையில் நேற்று ஒரு நாள் மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முழு ஊரடங்கை மீறி வெளியே வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அவசர தேவையின்றி வெளியே வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. வாகனங்களில் வெளியே வந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
தென்காசி மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சங்கரன்கோவில், புளியங்குடி ஆகிய 5 நகரசபை பகுதிகளிலும் நேற்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, தென்காசியில் காய்கறி கடைகள், பலசரக்கு கடைகள், பேக்கரிகள், பூக்கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. மருந்து கடைகள் மட்டும் திறந்து இருந்தன.